ஊட்டி மலை ரெயில் தனது முதல் பயணத்தை தொடங்கி 127 ஆண்டுகள் நிறைவு!

ஊட்டி மலை ரெயில் தனது வரலாற்று சிறப்புமிக்க பயணத்தை தொடங்கி இன்றுடன் 127 ஆண்டுகள் நிறைவடைகிறது.
ஊட்டி மலை ரெயில்
கோப்புப்படம்
Published on

நீலகிரி,

'மலைகளின் ராணி' என்று அழைக்கப்படும் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவர, ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே, அதாவது 1899-ம் ஆண்டு இதே நாளில் (ஜூன் 15) மலை ரெயில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவின் மிகப்பழமையான மலை ரெயில்களில் ஒன்றான இது, சுவிட்சர்லாந்தின் அதிநவீனத் தொழில்நுட்பத்தைக் கொண்டு, செங்குத்தான மலைப்பாதையில் ரெயில்கள் வழுக்காமல் ஏறுவதற்கு 'ரேக் அண்டு பினியன்' தண்டவாள அமைப்போடு உருவாக்கப்பட்டது.

127 ஆண்டுகள் நிறைவு

நிலக்கரி மூலம் நீராவி என்ஜின் கொண்டு இயக்கப்படும் ஊட்டி மலை ரெயில், தனது வரலாற்று சிறப்புமிக்க பயணத்தை தொடங்கி இன்றுடன் 127 ஆண்டுகள் நிறைவடைகிறது. காலங்கள் மாறினாலும், மலைப்பாதையில் இருபுறமும் தெரியும் கண்கொள்ளா காட்சிகளும், நீராவி ரெயில் என்ஜினும் இன்று வரை மாறவில்லை. ஆரம்பத்தில், மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே இயக்கப்பட்ட இந்த மலை ரெயில், பின்னர் 1908-ம் ஆண்டு அக்டோபர் 15-ந் தேதியன்று குன்னூரையும் தாண்டி ஊட்டி வரை நீட்டிக்கப்பட்டது.

யுனெஸ்கோ அங்கீகாரம்

முன்னதாக, 1903-ம் ஆண்டு அப்போதைய அரசாங்கத்தால் தேசியமயமாக்கப்பட்டு, அதன் பாரம்பரியத்தை போற்றும் வகையில், கடந்த 2005-ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால் உலகப் பாரம்பரிய தளமாக அங்கீகரிக்கப்பட்டது.

மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரையிலான 46 கிலோ மீட்டர் தூர ஊட்டி மலை ரெயில் பயணத்தில், அடர்ந்த காடுகள், எழில் கொஞ்சும் தேயிலைத் தோட்டங்கள், 208 சுற்றுகள், 16 கூர்மையான வளைவுகள், குகைகள் மற்றும் ஆழமான பள்ளத்தாக்குகள், அவற்றுக்கு மேல் அமைந்துள்ள 250-க்கும் மேற்பட்ட பாலங்கள் என்று ரெயிலில் பயணிக்கும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து இழுக்கிறது.

காலத்தால் அழியாத வரலாற்று பொக்கிஷம்

பனிமூட்டத்திற்கு மத்தியில் இன்றும் பாரம்பரிய நீராவி என்ஜின் உதவியோடு பயணிக்கும் இந்த ஊட்டி மலை ரெயில், வெறும் பயணத்திற்கான சாதனமாக அல்லாமல், காலத்தால் அழியாத வரலாற்றுப் பொக்கிஷமாக பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com