காஷ்மீர் போல மாறிய ஊட்டி: உறை பனிப்பொழிவு அதிகரிப்பு- குவியும் சுற்றுலாப்பயணிகள்


காஷ்மீர் போல மாறிய ஊட்டி: உறை பனிப்பொழிவு அதிகரிப்பு- குவியும் சுற்றுலாப்பயணிகள்
x

ஊட்டியில் உறை பனிப்பொழிவு அதிகரித்து உள்ளது. அங்கு உறைபனியை பார்க்க சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள், அவலாஞ்சி, அப்பர்பவானி, குன்னூர், கோத்தகிரி உள்பட மாவட்டம் முழுவதும் கடும் உறை பனிப்பொழிவு காணப்படுகிறது. ஊட்டி தலைகுந்தா பகுதியில் குறைந்தபட்சமாக மைனஸ் 1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இதனால் காலையில் பசும் புல்வெளிகளில் 1 அங்குலத்திற்கு உறைபனி காணப்படுகிறது. இந்த உறை பனிப்பொழிவால் கடும் குளிர் நிலவுகிறது. பச்சை புல்வெளியில் வெள்ளை கம்பளம் போர்த்தியது போல் காட்சியளிக்கிறது.

குறிப்பாக காலை நேரத்தில் குட்டி காஷ்மீரை போல் ஊட்டி தலைகுந்தா பகுதி காணப்படுகிறது. வழக்கமாக இந்த குளிர்காலத்தில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக இருக்கும். இந்த ஆண்டு இப்பகுதியில் உறை பனிப்பொழிவு ரீல்ஸ்கள் மூலம் சமூக வலைதளங்களில் வைரலானது. அதோடு தலைகுந்தா பகுதியும் பிரபலமாகி உள்ளது. இதனால் அப்பகுதியில் உறை பனிப்பொழிவை பார்க்க சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

அவர்கள் சாலையோரம் வாகனங்களை நிறுத்தி, புல்வெளிகளில் படர்ந்து இருந்த உறைபனியை கண்டு ரசித்தனர். வாகனங்கள் மீது படர்ந்திருந்த உறைபனியை கையில் எடுத்து விளையாடி மகிழ்ந்தனர். பனிப்பொழிவு காணப்பட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் நின்று புகைப்படம், செல்பி எடுத்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகளின் திடீர் வருகையால் தலைகுந்தா பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குப்படுத்தினர்.

மேலும் சாலைகளில் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களின் மீது உறை பனிப்பொழிவு ½ அங்குலத்திற்கு காணப்பட்டது. வீடுகளின் வெளியே பாத்திரங்களில் வைக்கப்பட்ட நீர் பனிக்கட்டி களாக மாறியது. இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில், “வழக்கமாக கோடை சீசனுக்கு ஊட்டிக்கு வருவோம். இந்த ஆண்டு சமூக வலைத்தளங்களில் ஊட்டி உறைபனி குறித்த ரீல்ஸ்கள் பிரபலமானதால், அதை பார்க்க ஒரு நாள் முன்னதாக வந்து அதிகாலை நேரத்தில் தலைகுந்தா பகுதிக்கு வந்தோம். காஷ்மீரில் இருப்பது போல் உள்ளது” என்றனர்.

1 More update

Next Story