காதலுக்கு எதிர்ப்பு: வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரியில் காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால் மனவிரக்தியடைந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காதலுக்கு எதிர்ப்பு

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி பெருமாள்புரத்தைச் சேர்ந்த உச்சிமாகாளி மகன் லட்சுமணராஜா (வயது 20). இந்த வாலிபர் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு பெண்ணின் வீட்டார் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், லட்சுமணராஜா கடந்த சில நாட்களாகக் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

மனவிரக்தி

உறவினர் ஒருவரின் துக்க வீட்டிற்கு குடும்பத்தினர் அனைவரும் சென்றிருந்த சூழலில், லட்சுமணராஜா மது அருந்திவிட்டு அந்த துக்க வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அவரது தந்தை உச்சிமாகாளி அங்கேயே வைத்துக் கண்டித்துள்ளார். இதனால் கடும் மனவிரக்தியடைந்த லட்சுமணராஜா வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

பின்னர் தனது நண்பரான மாதவன் என்பவருக்கு தொலைபேசி மூலம் விபரத்தைக் கூறிவிட்டு, வீட்டின் கூரையில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து பதறியடித்தபடி வீட்டிற்கு விரைந்து வந்த நண்பர் மாதவன் மற்றும் உறவினர்கள், லட்சுமணராஜாவை மீட்டு ஆட்டோ மூலம் ஆத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், லட்சுமணராஜா ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com