நுழைவுத் தேர்வுக்கு எதிர்ப்பு: தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

மத்திய பல்கலைக்கழகங்களில் சேர நுழைவுத் தேர்வு என்ற மத்திய அரசின் முடிவுக்கு எதிராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானத்தை முன்மொழிந்தார்.
நுழைவுத் தேர்வுக்கு எதிர்ப்பு: தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை,

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு கட்டாயம் என்ற மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. சட்டப்பேரவையில் தனித்தீர்மானத்தை முதல்-அமைச்சர் ஸ்டாலின் முன்மொழிந்தார்.

தீர்மானத்தின் மீது பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசின் நிதியுதவியுடன் இயங்கும் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் 2022-23 ஆம் கல்வியாண்டு முதல், பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்றும் மாநிலப் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்களும் இளங்கலை படிப்பு மாணவர் சேர்க்கைக்கு இந்த மதிப்பெண்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என பீடிகை போட்டு பல்கலைக்கழக மானிய குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பிளஸ் 2 மதிப்பெண்களை கணக்கில்கொள்ளாமல் நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுவது ஏற்புடையது அல்ல. அனைத்து மாணவர்களுக்கும் இது சமமான வாய்ப்பினை வழங்கிடாது. தமிழகத்தில் 70% மாணவர்கள் மாநில பாடத்திட்டங்களில் பயின்று வருகின்றனர். அவர்கள் பெரும்பாலும் விளிம்பு நிலை பிரிவைச் சேர்ந்தவர்கள். இந்த பொது நுழைவுத் தேர்வு முறை, பெரும்பான்மையானவர்களுக்கு பாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தும்.

இதனால் பல்கலைக்கழகங்களில் தமிழக மாணவர்களின் எண்ணிக்கையை குறையும். நீட் தேர்வைப் போன்றே, இதற்கும் மாணவர்கள் பயிற்சி மையங்களைச் சார்ந்திருக்கும் சூழல் ஏற்படும். இதனால் மாணவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாவார்கள். எனவே, மத்திய அரசின் கீழ் இயங்கும் பல்கலைக்கழக மானியக் குழு பொது நுழைவுத் தேர்வு முடிவை கைவிட வேண்டும். நுழைவுத் தேர்வு, பல்வேறு மாநிலப் பாடத்திட்டங்களில் படித்த மாணவர்களுக்கு சம வாய்ப்பை வழங்காது. பயிற்சி மையங்கள் புற்றீசல் போல வளர மட்டுமே நுழைவுத் தேர்வு சாதகமாக அமையும். பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com