அரசு முதுநிலை மருத்துவர்களுக்கான தற்காலிக பணி மாறுதல் ஆணை: அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்

பெரும் சிரமங்களை தவிர்க்கும் நோக்கிலும், முதுநிலை மருத்துவர்களுக்கு அருகாமையிலேயே உள்ள இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
அரசு முதுநிலை மருத்துவர்களுக்கான தற்காலிக பணி மாறுதல் ஆணை: அமைச்சர்  அருண்ராஜ் விளக்கம்
Published on: 

சென்னை,

அக்டோபர் 2026-ல் படிப்பை முடிக்கும் அரசு முதுநிலை மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தற்காலிகப் பணி மாறுதல் ஆணை குறித்து மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

அக்டோபர் 2026-ல் படிப்பை முடிக்கும் அரசு முதுநிலை மருத்துவர்களுக்கான (Service PGs 2023 - 2026 ஆம் கல்வியாண்டு) தற்காலிகப் பணி மாறுதல் ஆணை குறித்து எழும் விமர்சனங்கள் குறித்து மருத்துவர்களுக்கும், பொதுமக்களுக்கும் விரிவான விளக்கத்தை அளிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.

புதிய அரசு

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஆண்டுகளில் மருத்துவப் படிப்புகளுக்கான கல்வி மற்றும் கலந்தாய்வு கால அட்டவணைகளில் பெரும் காலதாமதம் ஏற்பட்டன. சென்ற ஆண்டு அக்டோபர் 2025-ல் முதுநிலை படிப்பு முடித்த மருத்துவர்களுக்கான கலந்தாய்வு டிசம்பர் 2025-ல் தான் நடைபெற்றது.

இடைப்பட்ட மூன்று மாதங்களுக்கான ஊதியம் வழங்குவது மற்றும் இதர பணி சார்ந்த நடைமுறைகளில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன. இவ்வாறான அட்டவணை மாறுபாட்டினால் இந்த ஆண்டு படிப்பை முடித்து வெளியேறும் மருத்துவர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது என்பதை நமது புதிய அரசு முன்கூட்டியே கணித்து, அவர்களின் நலனை மட்டுமே முதன்மையாகக் கருத்தில் கொண்டே இந்த உடனடி தீர்வு தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ளது.

பணியிட ஒதுக்கீட்டு முறை:

இந்த தற்காலிக நியமனங்கள் கூட மருத்துவர்கள் தாங்கள் அளித்த படிவத்தில் குறிப்பிட்ட 3 விருப்ப இடங்களின் (Top 3 Choices) அடிப்படையிலேயே மிகுந்த கவனத்துடன் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒருவேளை அவர்கள் கோரிய இடங்களில் காலிப்பணியிடம் இல்லை என்றால், மருத்துவர்களின் குடும்பச் சூழலைக் கருத்தில் கொண்டும், அவர்கள் வெகுதூரத்திற்கு இடம்பெயர்வதில் உள்ள பெரும் சிரமங்களைத் தவிர்க்கும் நோக்கிலும், அவர்களுக்கு அருகாமையிலேயே உள்ள இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த தற்காலிக ஏற்பாட்டினால் அரசு மருத்துவர்களுக்கு (Service PGs) கிடைக்கும் நேரடிப் பயன்கள்:

உடனடி ஊதிய உத்தரவாதம்:

பணி மாறுதல் தாமதமாகி மருத்துவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, பணியிடம் மாறும் மருத்துவர்களுக்கு அதிகபட்சம் 30 நாட்களுக்குள் LPC (Last Pay Certificate) மற்றும் பணிப் பதிவேடு (Service Register) முழுமையாக மாற்றப்பட வேண்டும். இதன் மூலம், அவர்கள் பணிக்குச் சேர்ந்த முதல் மாதத்திலேயே சம்பளம் எவ்வித தடையுமின்றி கிடைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை நமது அரசு உடனடியாக வெளியிடும்.

வெளிப்படையான கலந்தாய்வில் பங்கேற்கும் முழு உரிமை (As per G.O. 131):

இது ஒரு தற்காலிக நிர்வாக ஏற்பாடு மட்டுமே என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். அரசாணை நிலை எண். 131 (G.O. 131)-ன் வழிகாட்டுதல்களின்படி, இவ்வாறு தற்காலிகமாக நிரப்பப்பட்ட பணியிடங்கள் அனைத்தும் அடுத்து வரக்கூடிய கலந்தாய்வில் கட்டாயம் அறிவிக்கப்படும்.

எனவே, CML (Civil Medical List) மற்றும் பணிமூப்பு அடிப்படையில் மிக விரைவில் முறையான வெளிப்படையான கலந்தாய்வு (Regular Counselling) நடத்தப்படும். தற்போது தற்காலிக நியமனம் பெற்றுள்ள மருத்துவர்களும் அந்த கலந்தாய்வில் எவ்விதத் தடையுமின்றிப் பங்கேற்று, அரசாணை 131-ன் படி தங்கள் தகுதி மற்றும் பணிமூப்பு உரிமை அடிப்படையில் விருப்பமான பணியிடங்களைத் தேர்வு செய்ய முழுமையான வாய்ப்பு வழங்கப்படும்.

மேலும், வரும் ஆண்டுகளில் இந்த காலதாமதம் கூட ஏற்படாத வகையில், கலந்தாய்வு அட்டவணையில் உள்ள சிக்கல்கள் களையப்பட்டு, உரிய காலத்தில் கலந்தாய்வுகள் சீராக நடத்த அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்துக்கொண்டு வருகிறது என்பதையும் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com