தொழிற்சாலைகள் உரிமத்தை 31-ந்தேதிக்குள் புதுப்பிக்க உத்தரவு

இணையதளத்தின் மூலமாக உரிய கட்டணத்தை இணைய வழியில் செலுத்தி உரிமத்தை புதுப்பித்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகள் உரிமத்தை 31-ந்தேதிக்குள் புதுப்பிக்க உத்தரவு
Published on: 

சென்னை,

சென்னை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர் சி.சரவணன் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் செயல்பட்டு வரும் அனைத்து தொழிற்சாலைகளும் தொழிற்சாலைகள் சட்டம் 1948-ன்கீழ் 2027-ம் ஆண்டுக்கான தொழிற்சாலை உரிமத்தை வருகிற 31-ந்தேதிக்குள் கட்டாயம் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.

இதற்காக தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை அலுவலகத்துக்கு நேரில் வரவேண்டிய அவசியம் இல்லை. https://dish.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக உரிய கட்டணத்தை இணைய வழியில் செலுத்தி உரிமத்தை புதுப்பித்துக்கொள்ளலாம்.

கட்டணத்தை செலுத்தியவுடன் புதுப்பிக்கப்பட்ட உரிமத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள தொழிற்சாலை உரிமத்தில் திருத்தம் அல்லது மாற்றம் மேற்கொள்ள வேண்டியிருந்தால் அதற்கான விண்ணப்பத்தையும் இணையதளத்தின் மூலம் உரிய கட்டணத்தை செலுத்தி சமர்ப்பிக்க வேண்டும்.

இதேபோல் ஒப்பந்த தொழிலாளர் (முறைப்படுத்துதல் மற்றும் நீக்குதல்) சட்டம் மற்றும் ஒப்பந்த தொழிலாளர் விதிகளின் கீழ் பெறப்பட்டுள்ள உரிமங்களையும் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் இணைய வழியில் உரிய கட்டணத்தை செலுத்தி புதுப்பிக்க வேண்டும்.

வருகிற 31-ந்தேதிக்கு பின்னர் உரிமம் புதுப்பிக்க சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு நடைமுறையில் உள்ள விதிகளின்படி தாமதக்கட்டணத்தையும் சேர்த்து செலுத்த வேண்டும். அதோடு உரிய உரிமம் இல்லாமல் தொழிற்சாலையை இயக்கும் நிறுவனத்தின் மீது சட்டவிதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com