வ.உ.சிதம்பரனார் வேளாண்மை கல்லூரியில் அங்கக வேளாண்மை கண்காட்சி: தூத்துக்குடி கலெக்டர் தகவல்

கிள்ளிகுளத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வருகிற 7ம் தேதி அங்கக வேளாண்மை கண்காட்சி தூத்துக்குடி எம்.பி. தலைமையில் நடைபெறவுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சரால் 2025-2026-ம் ஆண்டுக்கான வேளாண் தனி நிதி நிலை அறிக்கையில் அங்கக வேளாண்மை (Organic Farming) விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு திட்டங்களை வேளாண்மை-உழவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தி வருகிறது. அதனைத் தொடர்ந்து, மாவட்ட அளவிலான அங்கக வேளாண்மை தொடர்பான விவசாயிகள் பெருவிழா கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் கிள்ளிகுளத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 7.10.2025, செவ்வாய்கிழமை காலை 10 மணிக்கு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் நடைபெறவுள்ளது.
உணவில் தன்னிறைவு அடைவதுடன், மக்களுக்கு நஞ்சில்லா உணவு கிடைத்து, அதன் மூலம் நோய் நொடியற்ற ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கவும், சுற்றுச்சூழலையும் மண்வளத்தையும் பாதுகாத்து வருங்கால தலைமுறையினருக்கு வழங்கவும் ஏதுவாக இந்த அங்கக வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற உள்ளது. அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.
கிள்ளிகுளம் வ.உ.சிதம்பரனார் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், வேளாண்மை அறிவியல் மைய பேராசிரியர்கள், வேளாண் மற்றும் வேளாண்மை சார்ந்த துறை அலுலர்கள் தொழில்நுட்ப சிறப்புரைகள் வழங்க உள்ளனர்.
வேளாண்மை உழவர் நலத்துறை சார்ந்த வேளாண்மைத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, விதை சான்றளிப்பு மற்றும் உயிர்ம சான்றளிப்பு துறை, கால்நடை பராமரிப்பு துறை, கிள்ளிகுளம் வ.உ.சிதம்பரனார் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், வாகைகுளம், வேளாண் அறிவியல் மையம் மற்றும் விவசாயிகள், விவசாயிகள் குழுக்களின் அங்கக வேளாண்மை தொடர்பான தயாரிப்புகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட உள்ளது.
இதில் இயற்கை விவசாயம் செய்துவரும் விவசாயிகளின் அனுபவங்கள் மற்றும் கருத்துப் பரிமாற்றம் மற்றும் விவசாயிகள், விஞ்ஞானிகள் கருத்துப் பரிமாற்றம் ஆகியவை நடைபெற உள்ளது. எனவே தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






