

பெலகாவி,
பெலகாவி மாவட்டம் சடல்கா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந் தவர் தீபக். இவருக்கு திருமணமாகி அனுஜா (வயது 19) என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் அனுஜாவும், மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ஆனந்த் (23) என்ற வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். ஆனந்த் வேறு சாதியை சேர்ந்தவர் என்பதால், இவர்களது காதலுக்கு தீபக் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.
இந்தநிலை அனுஜா, காதலருடன் மராட்டிய மாநிலத்துக்கு சென்றுள்ளார். அங்கு, இந்த காதல் ஜோடிக்கு ஜோதிடர் அஜித் (35) என்பவர் கலப்பு திருமணம் செய்து வைத்துள்ளார். இதுகுறித்து அறிந்த தீபக், ஜோதிடரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி, புதிய சிம் கார்டு ஒன்றை வாங்கி அஜித்தை தொடர்பு கொண்ட தீபக், காதல் ஜோடி ஒன்றுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் அதற்காக தாங்கள் பெலகாவிக்கு வர வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதனை நம்பிய ஜோதிடரும், தீபக் கூறிய இடத்துக்கு வந்துள்ளார். அங்கு வந்த தீபக், ஜோதிடரின் கண்களில் மிளகாய் பொடியை வீசி, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஜோதிடரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
இதுகுறித்து சடல்கா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஜோதிடரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பெலகாவி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீபக்கை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.