ஆவின் பால் லாரி உரிமையாளர்கள் 4-வது நாளாக வேலைநிறுத்தம் - ‘பால் தட்டுப்பாடு இல்லை’ என ஆவின் நிறுவனம் அறிவிப்பு

ஆவின் பால் லாரி உரிமையாளர்கள் 4-வது நாளாக நேற்று வேலைநிறுத்தத்தை தொடர்ந்தனர். பால் தட்டுப்பாடு ஏற்படவில்லை என ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆவின் பால் லாரி உரிமையாளர்கள் 4-வது நாளாக வேலைநிறுத்தம் - ‘பால் தட்டுப்பாடு இல்லை’ என ஆவின் நிறுவனம் அறிவிப்பு
Published on

சென்னை,

ஆவின் பால் நிறுவனம் தனியார் டேங்கர் லாரிகள் மூலம் தமிழகம் முழுவதும் பால் சப்ளை செய்துவருகிறது. டேங்கர் லாரிகளின் ஒப்பந்த காலம் முடிவடைந்த பின்னரும் புதுப்பிக்கப்படாமல் உள்ளதாகவும், அதனை புதுப்பிக்க வலியுறுத்தியும் ஆவின் தனியார் டேங்கர் லாரி உரிமையாளர்கள் கடந்த 14-ந்தேதி இரவு முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

4-வது நாளாக நேற்றும் வேலைநிறுத்தம் தொடர்ந்தது. தமிழகத்தில் மொத்தம் 303 தனியார் டேங்கர் லாரிகள் மூலம் பால் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. தற்போது அவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு இருப்பதால், மாற்று ஏற்பாடுகளை ஆவின் நிறுவனம் செய்து பால் சப்ளை செய்கிறது.

இதனால் தமிழகத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு இல்லாமல் முறையாக சப்ளை செய்யப்பட்டு வருகிறது என்று ஆவின் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

வேலைநிறுத்தம் குறித்து பால் சப்ளை செய்யும் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் வைத்தியநாதன் கூறியதாவது:-

நாங்கள் ஒப்பந்தத்தில் ஒரு கிலோ மீட்டருக்கு 24 ரூபாய் 80 காசு கேட்டோம். அதனை தரமறுக்கும் ஆவின் நிர்வாகம், தற்போது வேறு நிறுவனத்தின் லாரிகளை அழைத்து கிலோ மீட்டருக்கு ரூ.28 முதல் ரூ.32 வரையிலும், இதுதவிர சுங்க கட்டணம் தனியாகவும் வழங்கி வருகிறது.

அவ்வாறு சப்ளை செய்யப்படும் பால் பாதுகாப்பற்ற, சுகாதாரமற்ற முறையில்தான் வருகிறது. பொதுமக்களின் உடல்நலத்துடன் ஆவின் நிர்வாகம் விளையாடுகிறது. எனவே அரசு இதில் தலையிட்டு எங்களுடைய நியாயமான கோரிக்கையை ஏற்று தீர்வுகாண வேண்டும். இல்லாவிட்டால் அடுத்ததாக கோர்ட்டுக்குதான் நாங்கள் செல்லவேண்டும். ஆவின் நிறுவனம் எங்களை புறக்கணித்துவிட்டு ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் லாரிகளுக்கு ஒப்பந்தம் கொடுக்க திட்டமிடுகிறது. இதை அரசு தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com