

சென்னை,
இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த என்.எஸ்.ஓ. குழுமம் தயாரித்த பெகாசஸ் என்ற உளவு மென்பொருள் வாயிலாக பல நாடுகளை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட முக்கிய பிரமுகர்களின் மொபைல் உளவு பார்க்கப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தநிலையில் பெகாசஸ் விவகாரத்தில் மத்திய அரசு ஏன் நேரடியாக பதில் அளிக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், என்.எஸ்.ஓ. குழுமம் 40 அரசுகள் மற்றும் 60 முகமைகள் தனது வாடிக்கையாளர்கள் என்று கூறியுள்ளது. அந்த 40-ல் இந்திய அரசும் ஒன்றா?. இந்த எளிமையான கேள்விக்கு நேரடியாக பதிலை அளிப்பது இந்திய அரசுக்கு மிகவும் கடினமாக இருப்பது ஏன்? என்று அதில் ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.