டாப்சிலிப்பில் பொங்கல் விழாவில் பங்கேற்ற வளர்ப்பு யானை தாக்கி பாகன் சாவு

டாப்சிலிப் யானைகள் முகாமில், பொங்கல் விழாவில் பங்கேற்ற வளர்ப்பு யானை தாக்கியதில் பாகன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
டாப்சிலிப்பில் பொங்கல் விழாவில் பங்கேற்ற வளர்ப்பு யானை தாக்கி பாகன் சாவு
Published on

கோவை,

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட டாப்சிலிப் கோழிகமுத்தியில் வனத்துறைக்கு சொந்தமான வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. இங்கு வனத்துறை சார்பில் 27 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. நேற்று முகாமில், யானை பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில், வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்ட அசோக் என்ற 12 வயது யானை பங்கேற்றது. இந்த யானையின் பாகனாக கோழிகமுத்தி மலை கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் (வயது 45) மற்றும் முருகன் ஆகியோர் இருந்தனர்.

யானை தாக்கி பாகன் சாவு

இந்தநிலையில், நேற்று காலை வழக்கம் போல யானைக்கு ஆறுமுகம் உணவு அளித்து விட்டு மேய்ச்சலுக்காக வனப் பகுதிக்கு அழைத்து சென்றார். அப்போது, திடீரென அந்த யானை ஆறுமுகத்தை தாக்கியது. இதில் கீழே விழுந்த ஆறுமுகத்தின் மார்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்ததும் வனத்துறையினர் காயமடைந்த ஆறுமுகத்தை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே ஆறுமுகம் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

ஏற்கனவே ஒருவரை தாக்கியது

தகவலறிந்த ஆனைமலை போலீசார், ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆறுமுகத்தை தாக்கிய யானை ஏற்கனவே வண்டலூர் பூங்காவில் இருக்கும் போது 8 வயதில் ஒருவரை தாக்கியதாகவும், அதனால் டாப்சிலிப் முகாமிற்கு கொண்டு வரப்பட்டதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com