பழனி முருகன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.. 3 நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து

தைப்பூச திருவிழாவை ஒட்டி, பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
பழனி முருகன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.. 3 நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து
Published on

பழனி,

அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது.

விழாவையொட்டி தந்த பல்லக்கு, இரவில் தங்க மயில், வெள்ளி காமதேனு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெறுகிறது. இந்த சூழலில் தைப்பூச திருவிழா மற்றும் வார விடுமுறையையொட்டி நேற்று பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதன்படி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக பழனி நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.

குறிப்பாக திண்டுக்கல் சாலை, தாராபுரம் சாலை, உடுமலை சாலை உள்ளிட்ட பகுதிகளில் வழிநெடுகிலும் பக்தர்கள் அணிவகுத்து வருகின்றனர். அப்போது முருகனை நினைத்து பாட்டு பாடியும், ஒயிலாட்டம், கோலாட்டம் ஆடியும் வருகின்றனர். பின்னர் பழனிக்கு வந்ததும் பக்தர்கள் இடும்பன்குளம், சண்முகநதி பகுதியில் புனித நீராடுகின்றனர். இதற்காக பக்தர்களின் பாதுகாப்பு கருதி பழனி இடும்பன் குளத்தில் படகு மூலம் தீயணைப்பு படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இதையடுத்து பெரியநாயகி அம்மன் கோவில், திருஆவினன்குடி, பழனி முருகன் கோவில் சென்று வழிபடுகின்றனர். அப்போது பக்தர்கள் அலகு குத்தியும், முடிக்காணிக்கையும் செலுத்தி வருகின்றனர். மேலும் அடிவாரத்தில் இருந்து பழனி கோவிலுக்கு செல்லும் வழிகளான படிப்பாதை, யானைப்பாதை, மின்இழுவை ரெயில், ரோப்கார் நிலையம் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

கூட்டம் காரணமாக பழனி முருகன் கோவிலில் பொது, கட்டளை, கட்டண தரிசனம் உள்ளிட்ட அனைத்து தரிசன வழிகள், கோவில் வெளிப்பிரகாரம் ஆகிய இடங்களில் தரிசனத்துக்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். தொடர்ந்து பக்தர்கள் 5 மணி நேரம் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.

இந்நிலையில் நாளை தைப்பூச திருவிழா கொண்டாடப்படுவதை ஒட்டி பழனி முருகன் கோவிலில் இன்றும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனிடையே இன்று முதல் 3 நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று முதல் வரும் 12-ம் தேதி வரை விரைவு தரிசனக் கட்டணச் சீட்டுகளான ரூ.20 மற்றும் ரூ.200 ரத்து செய்யப்பட்டு, அனைவரும் இலவச தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், தைப்பூசத்தை முன்னிட்டு பழனி நகர் மற்றும் புறநகர் பகுதியில் 100 காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு ஐஜி, 2 டிஐஜி, 5 எஸ்.பி.க்கள் தலைமையில் 3 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தைப்பூச திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் இன்று (திங்கட்கிழமை) இரவு 7 மணிக்கு மேல் பெரியநாயகி அம்மன் கோவிலில் நடக்கிறது. தொடர்ந்து இரவு 9 மணிக்கு சாமி மணக்கோலத்தில் வெள்ளிரத புறப்பாடும் நடைபெறுகிறது. பின்னர் நாளை தைப்பூச நாளன்று அதிகாலை சண்முகநதியில் தீர்த்தவாரியும், மாலை 4.30 மணிக்கு தேரோட்டமும் நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com