3வது பிரசவத்திற்கும் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும்: சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

தமிழக அரசின் மனிதவள மேலாண்மை துறையின் கடிதத்தின் அடிப்படையில் 3வது பிரசவத்திற்கு பேருகால விடுப்பு வழங்க முடியாது என்று காரணம் கூறப்பட்டது.
பெண் ஊழியர்களின் 3வது பிரசவத்திற்கும் சம்பளத்துடன் கூடிய பேருகால விடுப்பு வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு மீண்டும் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
சென்னை ஐகோர்ட்டில் பணியாற்றும் மங்கையர்கரசி தனது 3வது பிரசவத்திற்காக கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி முதல் 2026 ஆகஸ்ட் 7ம் தேதி வரை பேருகால விடுப்பு கேட்டு ஐகோர்ட்டு பதிவாளரிடம் (நிர்வாகம்) விண்ணப்பித்துள்ளார். அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. தமிழக அரசின் மனிதவள மேலாண்மை துறையின் கடிதத்தின் அடிப்படையில் 3வது பிரசவத்திற்கு பேருகால விடுப்பு வழங்க முடியாது என்று காரணம் கூறப்பட்டது.
இதை எதிர்த்து மங்கையர்கரசி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவில், தனக்கு சம்பளத்துடன் கூடிய பேருகால விடுப்பு வழங்குமாறு பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஷமிம் அகமது ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், பேருகால விடுப்பு தொடர்பான தமிழக அரசின் அடிப்படை விதியில் 3வது பிரசவத்திற்கு பேருகால விடுப்பு வழங்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே, 3வது பிரசவத்திற்கு பேருகால விடுப்பு கேட்டு தொடரப்பட்ட வழக்கில் உமாதேவி என்பவர் தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 4ம் தேதி இந்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவை கடைபிடிக்காமல் மனுதாரரின் மனுவை நிராகரித்ததை ஏற்க முடியாது. அந்த உத்தரவு சம்மந்தப்பட்ட மனுதாரருக்கு மட்டும்தான் என்று பதிவாளர் எடுத்துக்கொண்டது சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு எதிரானது. இது போன்று உத்தரவுகளுக்கு பதிவாளர் வேறு விளக்கம் கர்ப்பித்துள்ளார். இது போன்ற மற்றொரு வழக்கிலும் 3வது பிரசவத்திற்கு பேருகால விடுப்பு வழங்குமாறு இந்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எனவே, ஐகோர்ட்டு பதிவாளர் மற்றும் மாவட்ட கோர்ட்டுகள் இதை புரிந்துகொண்டு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். எனவே, மனுதாரருக்கு பேருகால விடுப்பை நிராகரித்த ஐகோர்ட்டு பதிவாளரின் (நிர்வாகம்) உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரருக்கு 2025 ஆகஸ்ட் 8ம் தேதி முதல் 2026 ஆகஸ்ட் 7ம் தேதி வரை உரிய பணப்பலன்களுடன் ஒரு வாரத்திற்குள் பதிவாளர் விடுமுறை வழங்கி உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
மேலும், இதற்குமேல் இதுபோன்ற வழக்குகள் வராத வகையில் இந்த உத்தரவு குறித்து சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் ஜெனரல் அனைத்து மாவட்ட கோர்ட்டு பதிவாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.
அதேபோல், சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு உத்தரவுகளை அமல்படுத்துமாறு அனைத்து துறை செயலாளர்களுக்கும், துறை தலைவர்களுக்கும் தமிழக தலைமை செயலாளர் அறிவுறுத்தி இந்த உத்தரவு நகலை அனுப்பி வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.






