

பழனி,
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பூங்கா ரோட்டில் தண்டபாணி சுவாமி மடம் அறக்கட்டளைக்கு சொந்தமான 1 ஏக்கர் 40 சென்ட் நிலம் உள்ளது. ஐகோர்ட்டு உத்தரவுப்படி நிலத்துக்கான தக்காராக பழனி முருகன் கோவில் இணை ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி கோவில் நிர்வாகம் இந்த நிலத்தை நிர்வகித்து வருகிறது.
ரூ.100 கோடி மதிப்பிலான இந்த நிலம் கடந்த ஆண்டு பழனி முருக பக்தர்களின் வாகன நிறுத்துமிடமாக மாற்றப்பட்டது. இந்நிலையில் தண்டபாணி சுவாமி மட நிலம் கடந்த 6-ந்தேதி பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் தனியார் 2 பேருக்கு ரூ.2 கோடிக்கு கிரையமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது. பழனி கோவில் கட்டுப்பாட்டிலுள்ள நிலத்தை முறைகேடாக பதிவு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த முறைகேடு பதிவு குறித்து பழனி அடிவாரம் போலீசில் கோவில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் பழனி சார்பதிவாளராக இருந்த ஜஸ்டின் மணிகண்டன், நிலத்தை விற்ற விழுப்புரத்தை சேர்ந்த முருகதாஸ், அதனை வாங்கிய திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பாப்பன்குளத்தை சேர்ந்த வெள்ளத்துரை, பழனி அருகே உள்ள டி.கே.என்.புதூரை சேர்ந்த சேதுபதி என 4 பேர் மீதும் 5 பிரி வுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனிடையே ரூ.100 கோடி நிலம் முறைகேடாக பதிவு செய்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகிய 2 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். தொடர்ந்து முறைகேடு பதிவை ரத்து செய்யக்கோரி பழனி கோவில் இணை ஆணையர் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த ஐகோர்ட்டு தண்டபாணி சுவாமி மடத்தின் சொத்து தனியாருக்கு பத்திரப்ப திவு செய்தது செல்லாது என உத்தரவிட்டது. இந்த முறைகேடு தொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி தமிழக டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார்.
அதன்படி, ரூ.100 கோடி கோவில் நிலம் மோசடி வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், நிலத்தை விற்பனை செய்த பழனி கோவில் அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ் பத்திரப்பதிவு நடந்த நாள் முதல் தலைமறைவாகியுள்ளார். அவரை தொடர்ந்து நிலத்தை வாங்கிய உடுமலை வெள்ளத்துரை, சேதுபதி ஆகியோரும் தலைமறைவாகியுள்ளனர். 3 பேரையும் கைது செய்ய சிபிசிஐடி போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதற்கிடையில், பழனி கோவில் நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் பணியிடை நீக்க நடவடிக்கைக்கு உள்ளான சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் தாக்கல் செய்த முன் ஜாமின் மனு மதுரை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது. அவருக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது என கோவில் நிர்வாகம் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.