

பழனி,
முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடாக இருக்கக்கூடிய பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலில் தைப்பூசத் தேரோட்டம் நாளை நடக்கிறது. இந்த தைப்பூச திருவிழாவானது கடந்த 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து பெரியநாயகி அம்மன் கோவிலில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை சமேதராக தினமும் பல்வேறு ரதங்களில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இந்த நிலையில் தைப்பூச திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற இருக்கிறது. அதற்காக பெரியநாயகி அம்மன் கோவிலில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இரவு 9 மணிக்கு வெள்ளித் தேரில் வீதி உலா நடைபெற இருக்கிறது.
இதனை தொடர்ந்து தைப்பூச திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் நாளை மாலை 4.30 மணிக்கு நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு கோவில் சுற்று வட்டாரப் பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த தைப்பூச திருவிழா முழுவதும் நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கோவில் பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு வேண்டிய ஏற்பாடுகள் அனைத்தையும் கோவில் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 350 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பழனி மலையின் ஏறுபாதை, இறங்குபாதை என அனைத்து பகுதிகளிலும் மொத்தம் 4 ஆயிரம் போலீசார பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.