சபரிமலை சீசனை முன்னிட்டு 24 மணி நேரமும் பஞ்சாமிர்தம் - பழனி தேவஸ்தானம் ஏற்பாடு

திருவிழா காலங்களில் தினமும் ஒரு லட்சம் பஞ்சாமிர்தம் டப்பாக்கள் வரை விற்பனையாகும்.
சபரிமலை சீசனை முன்னிட்டு 24 மணி நேரமும் பஞ்சாமிர்தம் - பழனி தேவஸ்தானம் ஏற்பாடு
Published on: 

திண்டுக்கல்,

சபரிமலை சீசனை முன்னிட்டு பழனி முருகன் கோவிலுக்கு வரும் அய்யப்ப பக்தர்களுக்கு 24 மணி நேரமும் அபிஷேக பஞ்சாமிர்தம் விற்பனை செய்ய தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.

பஞ்சாமிர்தம் விற்பனை

பழனி தண்டாயுதபாணி கோவில் தேவஸ்தானம் சார்பில் அபிஷேக பஞ்சாமிர்தம் 500 கிராம் ரூ.40-க்கும், சீல்டு டின் ரூ.45-க்கும், 200 கிராம் ரூ.20-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சாதாரண நாட்களில் தினமும் 20 ஆயிரம் பஞ்சாமிர்தம் டப்பாக்கள் விற்பனையாகும். சபரிமலை அய்யப்ப சீசன், தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழா காலங்களில் தினமும் ஒரு லட்சம் பஞ்சாமிர்தம் டப்பாக்கள் வரை விற்பனையாகும்.

24 மணி நேரமும்...

தற்போது சபரிமலை அய்யப்ப சீசன் தொடங்கிய நிலையில், பழனி முருகன் கோவிலுக்கு வரும் அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக, கிரிவல பாதையில் உள்ள தேவஸ்தான பிரசாத விற்பனை மையங்களில் 24 மணி நேரமும் பஞ்சாமிர்தம் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கூடுதல் விற்பனை நிலையம்

ஏற்கெனவே வின்ச் ரெயில் நிலையம் எதிரில், அய்யம்புள்ளி சாலையில் உள்ள கல் மண்டபம், தேர் நிலையம் அருகில், சன்னதி வீதியில் 2 இடங்களில், பூங்கா சாலையில் ஒரு இடத்தில் பஞ்சாமிர்தம் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், கூடுதலாக அழகுநாச்சியம்மன் கோவில் எதிரே உள்ள சுற்றுலா பேருந்து நிலையத்திலும் பஞ்சாமிர்தம் விற்பனை நிலையம் அமைத்து விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

சபரிமலை அய்யப்ப சீசன் முடியும் வரை, பக்தர்களுக்கு தட்டுப்பாடின்றி பஞ்சாமிர்தம் கிடைப்பதற்காக அதன் தயாரிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

X