

சென்னை,
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் தாக்கப் பகுதியை குறைக்கும் முடிவை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
ஒரு காலத்தில் அடையாற்றின் உட்புறத்தில் தொடங்கி, பக்கிங்காம் கால்வாய் வரையிலும், கிண்டி முதல் சிறுசேரி வரையிலும் 15,000 ஏக்கரில் பரந்து விரிந்திருந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலம், இப்போது வெறும் 1,725 ஏக்கராக சுருங்கியுள்து.
பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என்பது சென்னை மாநகரின் இயற்கை பாதுகாப்பு அரண். பெருமழை, வெள்ளத்தின்போது தண்ணீரை உள்வாங்கி, கடலில் சேர்க்கும் இயற்கையான வடிகால் அமைப்பு. அதுமட்டுமல்ல, மழைக்காலத்தில் இந்த சதுப்பு நிலம் உறிஞ்சும் நீரானது, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தி கோடை காலத்தில் சென்னை மக்களுக்கு பயன் தருகிறது. 100-க்கும் அதிகமான உள்நாட்டு, வெளிநாட்டு பறவையினங்களின் வாழ்விடமாகவும் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் உள்ளது.
இத்தகைய இயற்கை பாதுகாப்பு அமைப்பை பாதுகாக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. ஆனால், "பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் தாக்கப் பகுதியை, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தால் அறிவிக்கப்பட்ட 8,397 ஏக்கர் பரப்பளவிலிருந்து, 316 ஏக்கராக குறைக்க முடிவு செய்துள்ளோம்" என, சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசின் சதுப்பு நிலங்கள் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிர்ச்சியளிக்கும் ஆணையத்தின் இந்த முடிவு கடும் கண்டனத்திற்குரியது.
தமிழக அரசின் இந்த முடிவு, அப்பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளை உருவாக்கி வரும் தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கு சாதகமாக உள்ளது. எனவே, தமிழக அரசு தனது முடிவை திரும்பப் பெற்று, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின், எல்லையை வரையறுத்து அதை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.
கொஞ்சம் எஞ்சியுள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்க தவறினால், எதிர்கால தலைமுறை நம்மை மன்னிக்காது. சென்னை மாநகரம் மழை காலங்களில் பேரழிவை சந்திக்கும் சூழல் உருவாகும். இதை உணர்ந்து தமிழக அரசு செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.