பங்குனி உத்திர திருவிழா கோலாகலம்: முருகன் கோவில்களில் திரளான பக்தர்கள் தரிசனம்

எடப்பாடி அருள் ஞான பாலமுருகன் கோவிலுக்கு பக்தர்கள் பலர் காவடி சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
எடப்பாடி அருள் ஞான பாலமுருகன் கோவிலுக்கு காவடி சுமந்து வந்த பக்தர்கள்
எடப்பாடி அருள் ஞான பாலமுருகன் கோவிலுக்கு காவடி சுமந்து வந்த பக்தர்கள்
Published on

எடப்பாடி,

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கோவில்களில் திருவிழாக்கள் விமரிசையாக நடைபெறுகின்றன.

சிறப்பு பூஜைகள், சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், திருக்கல்யாண உற்சவங்கள், சுவாமி வீதியுலா நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்கின்றனர். குல தெய்வ கோவில்களிலும் பக்தர்கள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுகின்றனர்.

எடப்பாடி கவுண்டம்பட்டி பிரதான சாலையில் உள்ள அருள் ஞான பாலமுருகன் திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக முருகப்பெருமான் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்கள் பலர் காவடி சுமந்தபடி பாதயாத்திரையாக கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதேபோல் எடப்பாடி அடுத்த கல்லபாளையம் பகுதியில் உள்ள பழனியாண்டவர் திருக்கோவிலில் நடைபெற்ற பங்குனி உத்திர சிறப்பு நிகழ்ச்சியில் அலங்கரிக்கப்பட்ட மலர் பல்லக்கில் முருகப்பெருமான் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து சிறப்பு மலர் அலங்காரத்தில் காட்சியளித்த முருகப்பெருமானை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு ஆலய நிர்வாக குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல் கவுண்டம்பட்டி குமாரவடிவேலர் திருக்கோவில், கொங்கணாபுரம் அருகே உள்ள வெண்குன்று தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோவில் மற்றும் க.புதூர் கந்தசாமி திருக்கோவில், சிலுவம்பாளையம் காவிரி கரை பகுதியில் உள்ள முருகப்பெருமான் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு முருகப்பெருமான் திருக்கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com