மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்துள்ளதை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும்: கலெக்டர் இளம்பகவத் பேச்சு

பிளஸ் 2 முடித்து மீன்வளம் சார்ந்த படிப்புகளில் சேரும் மீனவ சமுதாய மாணவர்களுக்கு இடஒதுக்கீடு உள்ளது என்று தூத்துக்குடி கலெக்டர் இளம்பகவத் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் நேற்று (31.5.2025), மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்று 2024-25-ம் கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மீனவ கிராம மாணவ, மாணவியர்களுடன் மாவட்ட கலெக்டர் இளம்பகவத் கலந்துரையாடி, தொழிற்கல்விப் படிப்புகள், கல்லூரிகள் தேர்வு, வேலைவாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்த உரிய வழிகாட்டுதல்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் இளம்பகவத் பேசியதாவது:
மாணவ, மாணவியர்களிடையே உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்து உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்ற நோக்கில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் "பெரிதினும் பெரிது கேள்" என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.
நமது மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 206 பள்ளிகளிலிருந்து 2024-25-ம் கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ள அனைத்து மாணவர்களையும் மதிப்பெண்களுக்கு ஏற்றவாரு உயர்கல்வியில் சரியான பாடப்பிரிவில் சேர்வதை உறுதி செய்வது, அந்த மாணவர்கள் அனைவருக்கும் என்னென்ன விதமான படிப்புகள் உள்ளது, எவ்வளவு மதிப்பெண் பெற்றிருந்தால் எந்தெந்த மாதிரியான படிப்புகளில் சேரமுடியும். அதற்கு எந்தெந்த வழிகளிலெல்லாம் விண்ணப்பிக்கலாம் போன்ற விவரங்களையெல்லாம் பள்ளி தலைமையாசிரியர்கள், உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள் ஆகியோர்களுக்கு தெரிவித்து அந்த தகவல்களையெல்லாம் மாணவர்களுக்கு தெரியப்படுத்தி உயர்கல்வி வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறார்கள்.
அந்தவகையில், நமது மாவட்டத்தில் வேம்பார், தருவைக்குளம், கீழவைப்பாறு, தூத்துக்குடி, பழையகாயல், வீரபாண்டியபட்டணம், ஆலந்தலை, பெரியதாழை, புன்னக்காயல், மணப்பாடு உள்ளிட்ட கடலோர மீனவ கிராமங்களிலிருந்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் என 40 பள்ளிகளிலிருந்து கிட்டதட்ட 130க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் வருகை தந்துள்ளீர்கள். நீங்களெல்லாம் நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில் 85 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று தொழிற்கல்விப் படிப்புகள் படிப்பதற்கு தகுதியானவர்களாக உள்ளீர்கள். உங்களுடைய எதிர்காலம் மிகவும் பிரகாசமாகவுள்ளது.
நமது மாவட்டத்தில் ஒரு மாணவர்கூட படிக்காமலோ அல்லது உயர்கல்விக்கு செல்லாமலோ இருக்கக்கூடாது என்ற அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று கல்வி கற்பதன் அவசியம் குறித்தும், உயர்கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு வருகிறது. பொதுவாக மீனவ கிராம மக்களில் பெண் குழந்தைகள் நல்லமுறையில் படிக்கிறார்கள். ஆனால், ஆண் பிள்ளைகள் முழுமையாக உயர்கல்வி படிக்காமல் கடலுக்கு வேலைக்கு சென்று விடுகிறார்கள் என்ற தகவல் வருகிறது.
குறிப்பாக, மீனவ கிராமத்தின் பெரியோர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களை அழைத்ததற்கு முக்கிய காரணம், நீங்கள் உங்களது பகுதிகளில் உள்ள மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, உயர்கல்வியில் சேர்ந்துள்ளார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும். ஒரு சில பெற்றோர்கள் அறியாமையின் காரணமாக மாணவர்களை படிக்க வைக்காமல் இருந்தால் அவர்களுக்கு பெரியோர்களாகிய நீங்கள் உரிய அறிவுரைகள் வழங்கி, மாணவர்கள் உயர்கல்வி சேர்வதை உறுதிசெய்து, அனைவரும் உயர்கல்வியில் சேர்ந்துவிட்டார்கள் என்ற தகவலை நீங்கள் அளிக்க வேண்டும்.
மாணவர்களாகிய நீங்கள் உங்களுடைய குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலைகளையெல்லாம் நன்கு அறிந்து ஆர்வமுடன் பயின்று பிளஸ் 2 பொதுத்தேர்வில் சிறப்பான மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளீர்கள். ஆகையால் ஒவ்வொரு மாணவர்களும் உங்களுடைய மதிப்பெண்களுக்கு ஏற்றார்போல் தொழிற்கல்விப் படிப்புகளுக்கு முன்னுரிமை அளித்து, விருப்பமுள்ள பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். தொழிற்கல்விப் படிப்புகளுக்கு சமுதாயத்தில் மிகுந்த வரவேற்புள்ளது.
தொழிற்கல்லூரிகளில் சேரக்கூடிய மாணவர்களுடைய அதாவது, பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்விப் படிப்புகளுக்கு ஆகக்கூடிய செலவு, கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், கலந்தாய்வுக் கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்கிறது. எனவே, மாணவர்கள் அரசு வழங்கக்கூடிய சலுகைகளை எல்லாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதில் மீன்வளம் சார்ந்த படிப்புகளில் சேரும் மீனவ சமுதாய மாணவர்களுக்கு இடஒதுக்கீடும் உள்ளது. அதையெல்லாம் நீங்கள் தவறாது பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நெய்தல் பகுதி மக்களாகிய நீங்கள் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் பின்தங்கிவிடக்கூடாது. வருங்கால இளம் தலைமுறையினருக்கு முன்னுதாரமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற துறைகளை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டு தொழிற்கல்விப் படிப்புகள், மதிப்பெண்களுக்கு ஏற்றவாரு கல்லூரிகளைத் தேர்வு செய்வது, தேர்வுசெய்யக்கூடிய பாடப்பிரிவுகள், எந்தெந்த பாடப்பிரிவு எடுத்து படித்தால் கிடைக்கக்கூடிய வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்து மாணவ, மாணவியர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தனர். மேலும் மேற்குறிப்பிடப்பட்டுள்ள தொழிற்கல்விப் படிப்புகளை தேர்ந்தெடுப்பது தொடர்பாகவும், விண்ணப்பிப்பதில் ஏதேனும் சந்தேகம் ஏற்படும்பட்சத்திலும் கட்டுப்பாட்டு அறையின் 93846 97546 மற்றும் 97888 59175 ஆகிய கைபேசி எண்களில் தொடர்புகொண்டு பயன்பெறலாம் என்று தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி, உதவி இயக்குநர் (மீன்வளம்) புஷ்ரா ஷப்னம், முன்னோடி வங்கி மேலாளர் துரைராஜ் உட்பட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள், பெற்றோர்கள், மீனவ சங்கப் பிரதிநிதிகள், மாணவ- மாணவியர்கள் கலந்துகொண்டனர்.






