தூத்துக்குடி அரசு இசைப்பள்ளியில் பகுதிநேர நாட்டுப்புற கலை பயிற்சி: மாணவர், மாணவிகள் பயன்பெறலாம்

வாரந்தோறும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மாலை 4 மணிமுதல் 6 மணி வரை நாட்டுப்புற கலை பயிற்சி வகுப்பு நடைபெறும் என தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளி வளாகத்தில் 2025-26-ம் ஆண்டிற்கான பகுதிநேர நாட்டுப்புற கலை பயிற்சியான ஒயிலாட்டம், வில்லிசை, நாட்டுப்புற பாடல் மற்றும் புலியாட்டம் ஆகிய கலைகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.
வாரந்தோறும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மாலை 4 மணிமுதல் 6 மணி வரை பயிற்சி வகுப்பு நடைபெறும். கல்லூரியில் படிக்கும் மாணவர், மாணவிகள், இளைஞர்கள் மற்றும் கலை ஆர்வலர்கள் பகுதி நேரமாக இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
இப்பயிற்சியில், 8ம் வகுப்பிற்கு மேல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்தின் மூலம் இக்கலை பயிற்சிக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு, அதற்கான சான்றிதழ்கள் வழங்கப்படும்.
படிப்பு சான்றிதழ் இல்லாதவர்கள் கலைகளை மட்டும் கற்றுக் கொள்ளலாம். இதற்கு வயது தடை இல்லை. 17 வயது முதல் கல்வி கற்கலாம். கல்விக்கட்டணம் ஆண்டுக்கு ரூ.500 மட்டுமே. எனவே கலை ஆர்வமுள்ள மாணவர், மாணவிகள், கலை ஆர்வலர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு, ஒருங்கிணைப்பாளர், மாவட்ட அரசு இசைப்பள்ளி, டி.சவேரியார்புரம், சிலுவைப்பட்டி அஞ்சல், தூத்துக்குடி- 2 என்ற முகவரியிலும், 9487739296 என்ற கைப்பேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.