சென்னை விமான நிலையத்தில் பறவைகள் தொல்லையால் பயணிகள் அவதி

சென்னை விமான நிலையத்துக்குள் பறவைகள் வருவதை தடுக்க பொருத்தப்பட்டுள்ள வலைகள் சில இடங்களில் பழுதடைந்து தொய்வு ஏற்பட்டதால் பறவைகள் உள்ளே வந்திருக்கலாம் என்று விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விமான பயணியின் உணவை உண்ணும் புறா.
Published on

சென்னை,

சென்னை விமான நிலையத்தில் புறாக்கள், காகங்கள் சுற்றித்திரிவதாகவும், உணவகங்களில் பயணிகள் உணவு சாப்பிடும்போது பறவைகள் பறந்து வந்து தட்டுகளில் உள்ள உணவை சாப்பிடுவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் பறவைகள் தொல்லை

சென்னை மீனம்பாக்கம் உள்நாடு மற்றும் வெளிநாடு விமான நிலையங்களில் பயணிகளுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வருவதாக சமூக வலைதளங்களில் புகார்கள் அதிகரித்துள்ளன. விமான நிலையத்தின் பாதுகாக்கப்பட்ட புறப்பாடு பகுதிகளில் புறாக்கள், காகங்கள் சுற்றித்திரிவதாகவும், உணவகங்களில் பயணிகள் உணவு சாப்பிடும்போது பறவைகள் பறந்து வந்து தட்டுகளில் உள்ள உணவை சாப்பிடுவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உணவை சாப்பிட முடியாமல் பயணிகள் அப்படியே விட்டுச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

வலைகள் பழுது

விமான நிலையத்துக்குள் பறவைகள் வருவதை தடுக்க வலைகள் பொருத்தப்பட்டுள்ளது. சில இடங்களில் அந்த வலைகள் பழுதடைந்து தொய்வு ஏற்பட்டதால் பறவைகள் உள்ளே வந்திருக்கலாம் என்று விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. பழுதடைந்த வலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது. இதேபோல், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளின் உடைமைகள் கன்வேயர் பெல்ட்டில் தாமதமாக கிடைப்பதாகவும், லக்கேஜ்களை எடுத்துச் செல்லும் டிராலிகள் பழுதடைந்த நிலையில் இருப்பதாகவும் பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

நடவடிக்கைகள் தீவிரம்

இதுகுறித்து நிர்வாகம் அளித்துள்ள பதிலில், "பழுதடைந்த டிராலிகளை குழுவினர் கண்டறிந்து அப்புறப்படுத்தி, சீரமைத்து வருவதாக தெரிவித்துள்ளது. மேலும், இனிமேல் பழுதடைந்த டிராலிகளை உடனடியாக கண்டறிந்து அகற்றி சீரமைக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்" என்றும் கூறியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com