

இயக்குனர் இமயம் என்று அழைக்கப்பட்ட பாரதிராஜா, வயோதிகம் மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 84.
16 வயதினிலே' திரைப்படம் மூலம் இயக்குனராக தடம் பதித்த பாரதிராஜா, அரங்கிற்குள் நடைபெற்று வந்த சினிமா படப்பிடிப்பை கிராமத்துக்கு கொண்டு வந்தவர் என்ற பெருமைக்குரியவர். 'சிவப்பு ரோஜாக்கள்'. 'கிழக்கு சீமையிலே', 'முதல் மரியாதை', 'வேதம் புதிது' என தனது படைப்புகளால் இந்திய சினிமாவையே கவனிக்க வைத்தவர்.
சில மாதங்களுக்கு முன்பு மலேசியாவில் இருந்து சென்னை திரும்பிய பாரதிராஜாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சுவாச பிரச்சினையால் அவதிப்பட்ட அவர் சென்னை தியாகராயநகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
உடல்நிலை ஓரளவு தேறியதை தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் அவர் ஆஸ்பத்திரியில் இருந்து 'டிஸ்சார்ஜ்' செய் யப்பட்டார். தொடர்ந்து சென்னை நீலாங்கரை இல்லத்திலேயே தங்கி ஓய்வு எடுத்து வந்தார். அவ்வப்போது மருத்துவ சிகிச்சைகளும் பெற்று வந்தார்.
இந்தநிலையில் வயோதிகம் மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று அதிகாலை அவர் உயிரிழந்தார். பாரதி ராஜா மறைவு செய்தி திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
பாரதிராஜாவின் உடல் நேற்று இரவு 9 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் வத்தலக்குண்டு காட்ரோடு அருகேயுள்ள அவரது பண்ணை வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கு இன்று அவரது உடலுக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டு, பிற்பகல் 3 மணியளவில் அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "பாரதிராஜா அவர்களின் மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. திரைப்பட உலகின் மகத்தான ஆளுமைகளில் ஒருவராக விளங்கிய அவர், தனது படைப்புகள் மூலம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தினார். குறிப்பாக, கிராமிய வாழ்க்கையை அவர் திரையில் சித்தரித்த விதம் மிகவும் சிறப்பானது.
இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும், அவரை நேசித்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.