

சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஒன்றியம், எஸ். மாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட 12 கிராமங்களில் கடந்த 72 ஆண்டுகளாக தீபாவளி கொண்டாடப்படுவதில்லை. எஸ்.மாம்பட்டி ஒப்பிலான்பட்டி, சந்திரபட்டி, தும்பைப்பட்டி, இடையபட்டி, கிலுகிலுப்பைப்பட்டி, திருப்பதிபட்டி, வலையபட்டி, கச்சப்பட்டி, கழுங்குப்பட்டி, தோப்புபட்டி மற்றும் இந்திரா நகர் பகுதிகளைச் சேர்ந்த மக்கள். தீபாவளியை மற்றொரு சாதாரண நாளாகவே கடந்து செல்கின்றனர். தீபாவளி நாளில் இந்தக் கிராமங்களில் பட்டாசு சத்தம் கேட்பதில்லை. புத்தாடை அணிந்தவர்களையும் காண முடிவதில்லை. வழக்கம்போல மக்கள் விவசாயப் பணிக்காக வயல்களுக்குச் சென்றுவிடுகின்றனர்.
அந்தப் பகுதிகளில் தீபாவளிக்கான எந்த அறிகுறியும் தென்படாது. இப்பகுதி மக்கள் புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் விவசாயப் பணிகளைத் தொடங்குவது வழக்கம். முந்தைய காலங்களில் பெரும்பாலானோர் வசதியில்லாத நிலையில் இருந்ததால், வட்டிக்கு பணம் வாங்கியே விவசாயப் பணிகளை மேற்கொண்டனர். தை மாதத்தில் அறுவடை முடிந்ததும். வாங்கிய கடனுக்காக நெல் தானியங்களை வழங்கி வந்தனர்.
இதனால் ஐப்பசி மாதத்தில் வரும் தீபாவளி அவர்களுக்கு கூடுதல் சுமையாக இருந்தது. பலரும் தீபாவளி கொண்டாடவும் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கு முடிவு கட்டும் வகையில், 1954-ம் ஆண்டு ஊர்க்கூட்டம் கூட்டிய மக்கள், இனி தீபாவளி கொண்டாடுவதில்லை என முடிவு செய்தனர். அந்த முடிவை 71 ஆண்டுகளாக தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றனர்.