தாமிரபரணி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருங்கள்: தூத்துக்குடி கலெக்டர் எச்சரிக்கை

இந்திய வானிலை ஆய்வுத்துறையின் சென்னை மண்டல மையத்தால் இன்று முதல் நாளை வரை தூத்துக்குடியில் மிக கனமழை பெய்யும் என ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி கலெக்டர் விஷு மகாஜன்.
Published on: 

தூத்துக்குடி,

தாமிரபரணி ஆற்றங்கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் விஷு மகாஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

20, 21-ம் தேதிகளில் ஆரஞ்சு எச்சரிக்கை

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடி மாவட்டம் மற்றும் தாமிரபரணி ஆற்றின் நீர்பிடிப்பு மாவட்டங்களான திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வுத்துறையின் சென்னை மண்டல மையத்தால் 20.10.2026 முதல் 21.10.2026 வரை மிக கனமழை பெய்யும் என ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தின் பல பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

தாமிரபரணி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருங்கள்

எனவே, தூத்துக்குடி மாவட்டம் மருதூர் மற்றும் திருவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள், கோரம்பள்ளம் ஆறு மற்றும் அணைக்கட்டு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ, ஆற்றின் கரையோர பகுதிகளுக்கோ செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும் படியும், மாவட்டத்தின் மழை நீர் தேங்கக்கூடிய இதர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களும் பாதுகாப்பாக இருக்கும்படியும் எச்சரிக்கப்படுகிறார்கள்.

வெள்ள பாதிப்புகள்; தொடர்பு எண்கள்

மேலும் மருதூர் அணைக்கட்டு, திருவைகுண்டம் அணைக்கட்டு, கோரம்பள்ளம் அணைக்கட்டு, உப்பாறு ஓடை, உப்பாத்து ஓடை மற்றும் அனைத்து நீர் நிலைகளையும் உன்னிப்பாக கண்காணித்து உரிய நடவடிக்கை உடனுக்குடன் மேற்கொள்ளவும், நகர பகுதிகளில் தேங்கும் மழை நீரை உடனுக்குடன் அகற்றிடவும், அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ள பாதிப்புகள் தொடர்பாகவும் மற்றும் உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, கைபேசி எண் - 7092300044-ஐ தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com