எடப்பாடி பழனிசாமியின் திசைதிருப்பும் அரசியலை மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் - மாணிக்கம் தாகூர்

பிரதமர் மோடியை நோக்கி ஏன் நீங்கள் ஒரு கேள்வி கூட எழுப்பவில்லை? என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமியின் திசைதிருப்பும் அரசியலை மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் - மாணிக்கம் தாகூர்
Published on

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

காவிரி விவகாரம்

தமிழகத்தின் டெல்டா பகுதி விவசாயிகள் தண்ணீரின்றித் தவித்து வரும் வேளையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழகத்திற்குச் சேர வேண்டிய காவிரி நீரைப் பெற்றுத் தர வேண்டிய முழுப் பொறுப்பும், அதிகாரமும் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கே (CWMA) உள்ளது. தார்மீகப் பொறுப்பைத் தட்டிக்கழிக்காமல் CWMA உடனடியாகச் செயல்பட்டு தண்ணீரைத் திறந்துவிட உத்தரவிட வேண்டும். அண்டை மாநிலமான கர்நாடகாவும் இந்த சட்டப்பூர்வ உத்தரவுகளுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.

இந்த காவிரி விவகாரத்தில், இது காங்கிரசுக்கு எதிராக காங்கிரஸ் என்ற அரசியல் விவாதம் அல்ல. இது தமிழகத்திற்கு எதிராக கர்நாடகம் என்பதாகும். விவசாயிகளின் இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், தமிழக காங்கிரஸ் பேரியக்கம் என்றும் தமிழக மக்களின் வாழ்வாதார உரிமைகளுக்காகவும், நமது விவசாயிகளின் நலனுக்காகவும் உறுதியுடன் துணை நிற்கும்.

இரட்டை நிலைப்பாடு ஏன்?

அரசியல் லாபத்திற்காக மற்றவர்களைப் பழிசுமத்தும் அரசியலைத் தூண்டும் பழனிசாமியே, உங்களின் இந்த இரட்டை நிலைப்பாடு ஏன்? தமிழகத்திற்கு எதிராகத் தொடர்ந்து பேசி வரும் கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் அசோகா உள்ளிட்ட பாஜகைவினரை மவுனமாக்க உங்கள் கூட்டாளியான பிரதமர் மோடியை நோக்கி ஏன் நீங்கள் ஒரு கேள்வி கூட எழுப்பவில்லை?

மத்தியில் ஆளும் உங்கள் கூட்டணிக் கட்சியான பாஜக விடமும், பிரதமரிடமும் தமிழகத்தின் உரிமைக்காகத் துணிவோடு குரல் எழுப்பத் தயங்குவது ஏன்? பிரதமரின் தலையீட்டைக் கோரி தண்ணீரைப் பெற்றுத் தர அழுத்தம் கொடுக்காமல், இங்கு வெற்று அரசியல் விமர்சனங்களை முன்வைப்பது உங்களின் இரட்டை நிலையைத் தான் அம்பலப்படுத்துகிறது.

பயந்து நடுங்குவது ஏன்?

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, பேரறிஞர் அண்ணாவின் பெயரையும் தாங்கி, செல்வி ஜெயலலிதாவால் துணிவோடு வழிநடத்தப்பட்ட ஒரு பேரியக்கத்தின் இன்றைய நிலை என்ன? மக்கள் வழங்கிய அதிகாரத்தைக் கொண்டு மக்களின் உரிமைகளை நிலைநாட்டத் தவறிவிட்டு, மத்தியில் உள்ளவர்களிடம் பணிந்து போய், மோடிக்கு விசுவாசத்தைக் காட்டிக் கொண்டு, தமிழ்நாட்டின் உரிமைகளைப் பேச பயந்து நடுங்குவது ஏன்?

உங்களின் இந்த பயமும், அடிமைத் தனமுமே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு கட்சியை இன்று கொஞ்சம் கொஞ்சமாகக் கரைத்து அழித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் உரிமைகளை அடகு வைத்து, கட்சியை அழிவுப் பாதைக்குக் கொண்டு செல்லும் உங்களின் இந்த திசைதிருப்பும் அரசியலைத் தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com