

சென்னை,
ஆட்டோ ஓட்டுநர் முகமது இப்ராஹிமின் மரணம் ஓர் எச்சரிக்கை மணியாகும். ஆட்டோ ஓட்டுநர்களின் நலன்காக்க தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முகமது இப்ராஹிம் கடன் சுமையால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். முகமது இப்ராஹிமின் உயிரிழப்பு மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதார நெருக்கடியை இந்த மரணம் வெளிப்படுத்தியுள்ளது. ஒரு தொழிலாளி தனது உழைப்பால் கண்ணியமாக வாழமுடியாமல் தொழிலை தொடர்ந்து நடத்துவதற்கே கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படுவது, சமூக அக்கறையுள்ள அரசுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கையாகவே கவனிக்கப்பட வேண்டும்.
பெட்ரோல் எரிவாயு, வாகனப்பராமரிப்பு, காப்பீடு, தகுதிசான்றிதழ் புதுப்பித்தல் உள்ளிட்ட செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், ஆட்டோ கட்டணம் 2013 ஆம் ஆண்டிலிருந்து திருத்தப்படாமல் இருப்பது, ஆட்டோ ஓட்டுநர்களின் வருமானத்தை வெகுவாக பாதித்துள்ளது. மறுபுறம் செயலி வழி போக்குவரத்து நிறுவனங்களின் போட்டி தனியாக தொழில் செய்யும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, 2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு நீண்டகாலமாக திருத்தப்படாத ஆட்டோ கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். செயலி வழி போக்குவரத்து நிறுவனங்களின் கட்டண நிர்ணயத்தை முறைப்படுத்த வேண்டும். அதிக கமிஷன் வசூலிக்கப்படுவதை தடுத்திட வேண்டும். ஆட்டோ ஓட்டுநர்களின் குறைந்தபட்ச வருமானத்தையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க தனிச்சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும்.
இப்ராஹிமின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்குவதுடன், ஆட்டோ ஓட்டுநர்களின் பொருளாதார நெருக்கடிக்கு நிரந்தரத் தீர்வு காண அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.