

சென்னை,
ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் அனுமதிக்கப்படுவதை வன்மையாக கண்டிப்பதாகவும், இந்த அனுமதியை மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் திரும்பப்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாட்டின் முதல் வெளிநாட்டுப் பல்கலைக்கழகமாக மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தை (University of Western Australia UWA) நிறுவ அனுமதி வழங்கப்பட்டு அது வேளச்சேரி பகுதியில் அமையவுள்ளது. இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
இதற்கான இறுதி ஒப்புதலை பல்கலைக்கழக மானியக் குழு (UGC) வழங்கியுள்ளது. தமிழ்நாடு அரசும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கையின் (NEP) 2020-ன் ஒரு பகுதியேயாகும். இது உயர் தட்டுத் நீவுகளாக உயர்கல்வி வளாகங்களை உருவாக்குவதோடு, கல்வி உரிமையை வணிக நலன்களுக்கு அடகு வைப்பதாகவும் அமையும். இதற்கு தமிழ்நாடு அரசும் ஒப்புதல் தந்திருப்பது ஏற்க இயலாதது.
ஹரியானா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்கள் ஏற்கெனவே அயல்நாட்டுப் பல்கலைக் கழகங்களை அனுமதித்து இருக்கும் நிலையில் தமிழ்நாடும் அப்பட்டியலில் இணைகிறது. தனியார் பல்கலைக் கழகங்களை ஊக்குவிக்கிற சட்டத் திருத்தம் ஒன்றை 2026 செப்டம்பர் மாதம் த.வெ.க. அரசு கொண்டு வந்தது. தற்போது அடுத்த தாக்குதலாக அள்ளியப் பல்கலைக் கழகத்திற்கு அனுமதி தந்துள்ளது.
ஒருபுறம் தமிழ்நாடு அரசு பல்கலைக் கழகங்களில் ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப மறுக்கிறது. 21 பல்கலைக் கழகங்களில் 30 சதவிகிதம் முதல் 50 சதவிகிதம் வரையிலான பணியிடங்கள் நிரப்பப்படாத நிலைமை உள்ளது. அரசு கலைக் கல்லூரிகளில் 7198 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதனால் அடித்தட்டு, நடுத்தட்டு மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய உயர்கல்வியின் தரம் பெரும் வீழ்ச்சியை சந்திக்கும் அபாயம் உள்ளது. இதைப் பற்றி கவலைப்பட வேண்டிய அரசாங்கங்கள் அயல்நாட்டு பல்கலைக் கழகங்களுக்கு வெண்சாமரம் வீசுவது வேதனைக்குரியது.
மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம், தனது இணையதளத்தில் தெரிவித்துள்ள முதல் ஆண்டு கல்விக் கட்டணங்கள் எளிய, நடுத்தர மாணவர்களுக்கு எட்டாத தூரத்தில் உள்ளன. எம்.பி.எ ரூ.23.10 லட்சம், செயற்கை நுண்ணறிவு - ரூ.17.93
லட்சம், வணிக மேலாண்மை - ரூ.14.52 லட்சம், தரவு அறிவியல் - ரூ.14.52 லட்சம் என முதல் ஆண்டுக் கல்விக் கட்டணங்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன. இது தவிர மற்ற கட்டணங்களும் உண்டு. அயல்நாட்டுப் பல்கலை கழகங்களின் கட்டணங்கள் மீது தலையிட ஒன்றிய அரசுக்கு அதிகாரம் கிடையாது என்பதால் வரம்பற்ற கட்டணக் கொள்ளைக்கே வழிவகுக்கும்.
எளிய, நடுத்தர மாணவர்கள் பயிலும் அரசு பல்கலைக் கழகங்களுக்கு, கலைக் கல்லூரிகளுக்கு போதுமான அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை வழங்காமல், வெளிநாட்டுப் பல்கலைக்கழகம் வரவேற்கப்படுவது என்பது கல்வி உரிமை மீது, இட ஒதுக்கீட்டின் மீது. தேசத்தின் இறையாண்மை மீது தொடுக்கப்படும் கடும் தாக்குதல் ஆகும்.
ஆகவே, ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் அனுமதிக்கப்படுவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைகழக்கத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.