

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் விஷு மகாஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் வெளியிடும் தேர்தல் விளம்பரங்களை கண்காணிக்க "ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு" (MCMC) அமைக்கப்பட்டுள்ளது. விளம்பரங்களை வெளியிடும் முன் இந்த குழுவிடம் கட்டாயம் அனுமதி பெற வேண்டும்.
1.மின்னணு மற்றும் சமூக ஊடகங்களுக்கான விதிகள்:
தொலைக்காட்சி, கேபிள் டிவி, வானொலி (FM), திரையரங்குகள், டிஜிட்டல் திரைகள், பல்க் எஸ்.எம்.எஸ். (Bulk SMS) மற்றும் வாய்ஸ் கால்கள் மூலம் செய்யப்படும் விளம்பரங்களுக்கு முன்அனுமதி அவசியம்.
சமூக வலைத்தளங்கள்: பேஸ்புக், எக்ஸ் (X), இன்ஸ்டாகிராம், யூடியூப் மற்றும் இணையதள விளம்பரங்களுக்கும் இது பொருந்தும்.
விண்ணப்பிக்கும் காலம்:
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் விளம்பரம் வெளியிடுவதற்கு 3 நாட்களுக்கு முன்பும், சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் இதர அமைப்புகள் 7 நாட்களுக்கு முன்பும் விண்ணப்பிக்க வேண்டும்.
2.அச்சு ஊடகங்களுக்கான (நாளிதழ்) விதிகள்:
சாதாரண நாட்களில் நாளிதழ்களில் வெளியாகும் விளம்பரங்களுக்கு முன்அனுமதி தேவையில்லை. ஆனால், அதன் செலவு வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும்.
வாக்குப்பதிவு நேரக் கட்டுப்பாடு:
வாக்குப்பதிவு நாளான 23.4.2026 மற்றும் அதற்கு முந்தைய நாளான 22.4.2026 ஆகிய 2 நாட்களில் நாளிதழ்களில் வெளியாகும் அனைத்து அரசியல் விளம்பரங்களுக்கும் 48 மணி நேரத்திற்கு முன்பாக MCMC அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
3.விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக தரைத்தளத்தில் இயங்கும் MCMC அலுவலகத்தில் கீழ்க்கண்டவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம்.
விளம்பரத்தின் மாதிரி நகல் (CD/Pendrive அல்லது மாதிரித் தாள்).
விளம்பரத்தின் உரை (Script) மற்றும் உத்தேச செலவு மதிப்பீடு.
மற்றவர்களைப் புண்படுத்தாத வகையில் விளம்பரம் உள்ளது என்பதற்கான உறுதிமொழி மற்றும் பதிப்புரிமைச் சான்று.
4.விதிமீறல் மீதான நடவடிக்கை:
அனுமதியின்றி விளம்பரங்களை வெளியிடுவது மற்றும் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவது தேர்தல் விதிமீறலாகும். அத்தகைய விளம்பரங்கள் கண்டறியப்பட்டால், அதன் செலவினம் வேட்பாளரின் தேர்தல் கணக்கில் சேர்க்கப்படுவதுடன், சட்டப்பூர்வமான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.
அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்தின் இந்த நெறிமுறைகளை முழுமையாகப் பின்பற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.