

ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்துக்குள்பட்ட சாப்டூர் வனச்சரகத்தில் புகழ் பெற்ற சதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோவில்கள் அமைந்துள்ளன. இந்த கோவில்களுக்கு மலைப் பாதை வழியாக 10 கி.மீ. தொலைவு நடந்து செல்ல வேண்டும். இங்கு பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாள்களில் மட்டுமே பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக சதுரகிரி மலைப்பாதையில் உள்ள ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி மலைக்கோயில் ஏற பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அறிவித்துள்ளது.
இதன்படி சதுரகிரி மலைக்குச் செல்ல இன்று முதல் 4 நாட்களுக்கு தரப்பட்டிருந்த அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்ல வந்திருந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்
முன்னதாக ஸ்ரீவில்லிபுத்தூரில் நேற்று முன்தினம் இரவு 9 மணி முதல் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. அதன் பிறகு விடிய விடிய மழை பெய்தது. இதனால் ஸ்ரீவில்லிபுத்தூர், செண்பகத் தோப்பு மலைப்பகுதிகளிலும் பெய்த பலத்த மழையால் பேயனாற்றில் நீர்வரத்து அதிகரித்தது. பலத்த மழையால் ஸ்ரீவில்லிபுத்தூர் கீழ ரத வீதி, ஆத்துக்கடை போன்ற தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் மலைப்பகுதியில் உள்ள ராக்காச்சி அம்மன் கோவில் ஓடை, செண்பகத்தோப்பு, வீரியன் கோவில் பகுதியில் தண்ணீர் வரத்து தொடங்கியது. எனவே செண்பகத்தோப்பு பகுதிக்கு செல்லும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கவனத்துடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் கூறினர்.