

சென்னை,
சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பகுதியில் இன்று குடியிருப்புக்குள் புகுந்த 6 அடி நீள மலைப்பாம்பால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை பெருங்களத்தூர் ஆலப்பாக்கம், கணபதி நகர் குடியிருப்புப் பகுதிக்குள் இன்று (திங்கட்கிழமை) காலை திடீரென 6 அடி நீளமுள்ள பெரிய மலைப்பாம்பு ஒன்று நுழைந்துள்ளது. வீட்டின் அருகே பாம்பு ஊர்ந்து செல்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள், உடனடியாக இது குறித்து வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், பொதுமக்களை அச்சுறுத்திக் கொண்டிருந்த அந்த மலைப்பாம்பை மிகவும் லாவகமாகப் பிடித்து மீட்டனர். பின்னர், பிடிபட்ட மலைப்பாம்பை பாதுகாப்பான அடர்ந்த வனப்பகுதியில் விடுவிப்பதற்காக வனத்துறையினர் கொண்டு சென்றனர்.
மழைக்காலம் மற்றும் குளிர்காலங்களில் பாம்புகள் தஞ்சம் புக குடியிருப்பு பகுதிகளை நோக்கி வர வாய்ப்புள்ளதால், வீட்டைச் சுற்றியுள்ள புதர்கள் மண்டிய இடங்களைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று வனத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும், பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்றும், குழந்தைகளை வெளியே அனுப்பும் போது கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர். வனத்துறையினரின் இந்த விரைவான நடவடிக்கையால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.