வள்ளலார் மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது வரவேற்கத்தக்கது - அன்புமணி ராமதாஸ்

பெருவெளியை பாதிக்காத வகையில் பன்னாட்டு மையம் அமைக்கப்படுவதை எதிர்க்கவில்லை என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அன்புமணி ராமதாஸ்
கோப்புப்படம்
Published on

சென்னை,

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

வடலூர் பார்வதிபுரத்தில் உள்ள சத்தியஞான சபை வளாகத்தில் உள்ள பெருவெளியில் வள்ளலார் பன்னாட்டு மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாக சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது. பார்வதிபுரம் மக்களின் உணர்வுகளுக்கு எதிராகவும், வள்ளலாரின் நோக்கங்களுக்கு எதிராகவும் முந்தைய திமுக அரசால் மேற்கொள்ளப்பட்ட சதித் திட்டம் கைவிடப்பட்டது வரவேற்கத்தக்கது.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் பெருமை உலகம் முழுவதும் கொண்டு சென்று சேர்க்கப்பட வேண்டும். அதற்காக அவருக்கு பன்னாட்டு மையம் அமைக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச நாளில் ஜோதி தரிசனம் காண சத்தியஞான சபை வளாகத்தில் பல லட்சம் பக்தர்கள் கூடும் பெருவெளியில் வள்ளலார் பன்னாட்டு மையம் அமைக்கப்படும் என்று முந்தைய திமுக அரசு அறிவித்தபோது தான் அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. பல போராட்டங்களை நடத்தியது. பெருவெளியைக் காக்க வலியுறுத்தி நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் நானும் பங்கேற்றேன். மக்கள் உரிமை பயணத்தின் போதும் அங்கு சென்று வழிபட்டு வந்தேன்.

ஆனால், முந்தைய திமுக அரசு சில சுயநல நோக்கங்களுக்காக அங்கு தான் வள்ளலார் மையம் அமைக்கப்படும் என்பதில் உறுதியாக இருந்தது. அதற்கு எதிராக போராடிய மக்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டது. பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடத்த முயன்றபோது அதற்கு அனுமதி கூட கொடுக்காமல் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டது.

ஆனால், புதிய அரசு பதவியேற்ற பிறகு பாமக மற்றும் பார்வதிபுரம் மக்களின் கோரிக்கையை ஏற்று அத்திட்டத்தை கைவிடுவதாக அறிவித்திருப்பது சிறந்த முடிவு. பெருவெளியியில் வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைக்கக் கூடாது என்பதுதான் பாமகவின் நிலைப்பாடு. அதே நேரத்தில் பெருவெளியை பாதிக்காத வகையில் பன்னாட்டு மையம் அமைக்கப்படுவதை எதிர்க்கவில்லை.

எனவே, வள்ளலாருடன் தொடர்புடைய வடலூரில் வேறு இடத்திலோ, அருகில் உள்ள வள்ளலாருடன் தொடர்புடைய இடங்களிலோ வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com