

சென்னை,
'1033' உதவி எண்ணை ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் மேம்படுத்த தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இது விபத்து நடந்த இடத்துக்கு 30 வினாடிகளுக்குள் ஆம்புலன்ஸ் அனுப்ப உதவும்.
இந்தியாவில் உள்ள மொத்த சாலை வலையமைப்பில் தேசிய நெடுஞ்சாலைகள் 2.3 சதவீதம் மட்டுமே என்றாலும், சாலை விபத்து உயிரிழப்புகளில் 36 சதவீதத்துக்கும் அதிகமானவை அவற்றிலேயே நிகழ்கின்றன.
இதனால், விபத்து நடந்த முதல் 60 நிமிடங்களுக்குள் உயிர்களை பாதுகாக்க தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் '1033' என்ற உதவி எண் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. தற்போது 1.46 லட்சம் கிலோமீட்டர் நீள தேசிய நெடுஞ்சாலைகளில் 24 மணி நேரமும் செயல்படும் இந்த சேவைக்கு, தினமும் சராசரியாக 15 ஆயிரம் அழைப்புகள் வருகின்றன.
இந்தநிலையில், தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்வோருக்கு விரைவான மற்றும் மேம்படுத்தப்பட்ட சேவைகளை வழங்குவதற்காக, 1033 என்ற அவசர உதவி எண்ணை செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.), நிகழ்நேர கண்காணிப்பு மற்றும் நவீன அவசரகால பதில் அமைப்புகளுடன் மேம்படுத்த தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
புதிய அமைப்பு உதவி எண்ணை அழைப்பவர்களின் இருப்பிடத்தை உடனுக்குடன் துல்லியமாக கண்டறியும். பல்வேறு இந்திய மொழிகளில் பேசப்படும் கோரிக்கைகளை புரிந்துகொண்டு, விபத்து நடந்த இடத்துக்கு 30 வினாடிகளுக்குள் அருகில் உள்ள ஆம்புலன்ஸ், கிரேன் அல்லது ரோந்து வாகனங்களை அனுப்ப உதவியாக இருக்கும்.
மேலும், போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை நிலவரங்களை நேரடியாக கண்காணித்து விரைவான பாதையில் வாகனங்களை அனுப்ப நடவடிக்கை எடுக்கும்.
விபத்துக்களுக்கான உதவி மட்டுமின்றி, சுங்கச்சாவடி, பாஸ்டேக், சாலை நிலவரம் குறித்த புகார்கள் போன்ற அவசரமில்லாத கோரிக்கைகளும் குரல் வழி, 'எஸ்.எம்.எஸ்., வாட்ஸ்அப்' மற்றும் செல்போன் செயலி மூலமும் மேம்படுத்தப்பட்ட உதவி எண் நிர்வகிக்கப்படும். புதிய திட்டத்தின் கீழ், இந்த அமைப்பு அவசரகால உதவி எண் 112 மற்றும் 'ராஜ்மார்க் யாத்ரா' செயலியுடன் ஒருங்கிணைக்கப்பட உள்ளது.
தொழில்நுட்பங்கள் மேம்படுத்தப்பட்டாலும், மனித தலையீடு தேவைப்படும் சூழல்களில் ஆபரேட்டர்கள் தொடர்ந்து செயல்படுவார்கள் என தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.