

கோவை,
கோவை மாவட்டத்தில் பள்ளியில் சாதியை சொல்லி கிண்டல் செய்ததால் பிளஸ்-1 மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
கோவை பீளமேடு ஏ.டி.காலனியை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 45). இவருடைய மனைவி கவுசல்யா தேவி (40). இவர்களின் மகன் அகிலன் (16). இவர், பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
அவரை, பள்ளியில் சக மாணவர்கள் சாதி பெயரை சொல்லி கிண்டல் செய்ததாக தெரிகிறது. இதற்கிடையே ஆயுதபூஜை விடுமுறை முடிந்த பின்னர் நேற்று காலையில் அகிலன் பள்ளிக்கு சென்றார். பள்ளி தொடங்குவதற்கு முன்பு பிரார்த்தனை நேரம் நடக்கும்போது அகிலனை சாதி பெயரை சொல்லி சில மாணவர்கள் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த அகிலன் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
வீட்டில் தனியாக இருந்த அகிலன் வாழ்க்கையில் விரக்தியடைந்து தூக்கில் தொங்கினார். இதற்கிடையே அவரது தாயார் கவுசல்யா தேவி நேற்று மதியம் 1 மணியளவில் வீட்டுக்கு சாப்பிட வந்தார். அப்போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருப்பதையும், பலமுறை தட்டியும் திறக்காமல் இருந்ததால் சந்தேகம் அடைந்தார்.
உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, அங்கு அகிலன் தூக்கில் தொங்கியபடி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவரை மீட்டு அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அகிலன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இது குறித்து போலீசார் கூறும்போது, தற்கொலை செய்து கொண்ட அகிலன் கிரிக்கெட் பயிற்சியில் சேர்த்து விடுமாறு பெற்றோரிடம் கூறி உள்ளார். பள்ளி வகுப்பறையில் சக மாணவர்கள் சாதி பெயரை சொல்லி கிண்டல் செய்து ஒதுக்கி வைப்பதாக கூறியதாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் தெரிவித்து உள்ளனர்.அது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக பள்ளி ஆசிரியர் விஜயகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக மாணவரிடம் சாதி குறித்து பேசியதாக ஆசிரியர் விஜயகுமார் மற்றும் நடவடிக்கை எடுக்காததாக தலைமை ஆசிரியர் அருண்குமார் மீது பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில் பட்டியலின மக்களுக்கு எதிரான வன்முறை, தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் ஆசிரியர் விஜயகுமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.