தூத்துக்குடியில் வளர்ப்பு நாய் கடித்ததில் பிளஸ்-1 மாணவி உயிரிழப்பு

தூத்துக்குடியில் வளர்ப்பு நாய் கடித்ததில் உயிரிழந்த பிளஸ்-1 மாணவியின் உடல் மதுரை தத்தனேரி மயானத்தில் அரசு சார்பிலேயே முறைப்படி தகனம் செய்யப்பட்டது.
தூத்துக்குடியில் வளர்ப்பு நாய் கடித்ததில் பிளஸ்-1 மாணவி உயிரிழப்பு
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள புதியம்புத்தூரைச் சேர்ந்தவர் செல்வகுமார். ரெடிமேட் பின்னலாடைத் தொழில் செய்து வரும் இவருக்கு, ஜோதி என்ற மனைவியும், செல்வசுஹாசினி (வயது 16) என்ற மகளும் உள்ளனர். செல்வசுஹாசினி தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 (11-ம் வகுப்பு) படித்து வந்தார்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, வீட்டில் வளர்க்கும் நாயுடன் செல்வசுஹாசினி விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது அந்த நாயின் நகம் பட்டதில் மாணவிக்குக் காயம் (கீறல்) ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. நாய் கடித்த அல்லது கீறல் ஏற்பட்ட உடனே முறையான மருத்துவ ஆலோசனை பெறாமலும், 'ரேபிஸ்' தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமலும் மாணவி இருந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 28-ம் தேதி செல்வசுஹாசினிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், நாய் கடித்ததன் மூலம் விஷம் (Rabies) உடல் முழுவதும் பரவி இருப்பதை உறுதி செய்தனர்.

இதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி, நேற்று முன்தினம் செல்வசுஹாசினி உயிரிழந்தார்.

மாணவியின் உயிரிழப்பால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், உடலைப் பெற்றுக்கொள்ள முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, மதுரை தத்தனேரி மயானத்தில் அரசு சார்பிலேயே மாணவியின் உடல் முறைப்படி தகனம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் புதியம்புத்தூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com