

சென்னை,
பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை நடைபெற்றது. சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதினார்கள். தேர்வு முடிவு மே 8-ந்தேதி (அதாவது இன்று) வெளியாகும் என தற்காலிக அட்டவணையில் அரசுத்தேர்வுத்துறை தெரிவித்து இருந்தது.
இதற்கிடையில் 2026 சட்டமன்ற தேர்தல், புதிய அரசாங்கம் அமைவது போன்ற காரணங்களினால் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு ஏற்கனவே அட்டவணையில் குறிப்பிட்ட தேதியில் வெளியாகுமா? என்ற கேள்வி எழுந்தது.
இதுதொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது, 'தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாகவே தெரிவித்தனர். அதற்கேற்றாற்போல், நேற்றுமுன்தினம் அரசு தேர்வுத்துறையும் பொதுத்தேர்வு முடிவுகள் இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அறிவித்தது. இந்தநிலையில் நேற்று மாலை பொதுத்தேர்வு முடிவு இன்று (வெள்ளிக்கிழமை) காலை வெளியிட இருப்பதாக அறிவித்திருந்தது.
இந்நிலையில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பிளஸ்-2 பொதுத்தேர்வில் 95.20 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதன்படி மாணவர்கள் 93.19 சதவீதமும், மாணவிகள் 97 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தேர்வு முடிவுகள் தொடர்பாக அரசுத்தேர்வுத்துறை சார்பில் வெளியிடப்பட்டிருந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருந்ததாவது:-
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு 8-ந்தேதி (அதாவது இன்று) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, results.digilocker.gov.in இணையதளங்களில் சென்று பார்க்கலாம். மேலும் பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் அறிந்து கொள்ளலாம். இதுதவிர பள்ளி களில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்ட செல்போன் எண் ணுக்கும் குறுஞ்செய்தி வாயிலாக தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப் படும்.
'வாட்ஸ்-அப்' செயலி வாயிலாகவும் தேர்வு முடிவுகளை பார்க்க முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 7845252525 என்ற எண் ணுக்கு ‘Hi' என பதிவிட்டு பின்னர் வரும் செய்தியில் துறையின் பெயர் மற்றும் தேர்வர்களின் வகுப்பை தேர்வு செய்தால் தேர்வெண், பிறந்த தேதி கேட்கும். அதனையும் உள்ளீடு செய்தால் தேர்வு முடிவுகளை பார்க்கலாம்.
ஒவ்வொரு மாணவரும் வாழ்க்கையில் பல்வேறு வழிகளில் முன்னேறி வெற்றிபெறும் திறன் கொண்டவர்கள். மேலும் எதிர்காலத்தில் பல்வேறு வாய்ப்புகள் காத்திருக்கின்றன. தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு விரைவில் துணைத்தேர்வு எழுதுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும். அவர் களுக்கு ஆதரவாக பள்ளிகள் மூலம் சிறப்பு பயிற்சியும் வழங்கப்படும்.
மாணவர்கள், பெற்றோர் 14417, 104, 14416 என்ற ஆலோசனை உதவி எண்களையும் தொடர்பு கொண்டும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழ்நாட்டிலே, முதல் இடம் பிடித்த மாணவி..!
பிளஸ் 2 பொதுத்தேர்வில், தமிழ்நாட்டிலே முதல் இடம் பிடித்த அரியலூர் தனியார் பள்ளி மாணவி. 600க்கு - 598 மதிப்பெண்கள் பெற்று மாணவி சாதனை படைத்துள்ளார்.