விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் நிறைவு: டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் 45 மணி நேர தியானம் இன்று பிற்பகலுடன் நிறைவு பெற்றது.
விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் நிறைவு: டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி
Published on

கன்னியாகுமரி,

பிரதமர் மோடி நேற்றுமுன்தினம் நாடாளுமன்ற தேர்தலுக்கான இறுதிகட்ட பிரசாரத்தை முடித்துக்கொண்டு கன்னியாகுமரி வந்து சேர்ந்தார். பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பிறகு மாலையில் விவேகானந்தர் மண்டபத்தில் தியானத்தை தொடங்கிய அவர் அதிகாலை 5.30 மணி வரை மொத்தம் 11 மணி நேரம் தியானத்திலேயே இருந்தார்.

தியானத்தின்போது காவி வேட்டி, காவி சட்டை, காவி துண்டுக்கு மாறினார். நெற்றியில் திருநீற்று பட்டையுடன், சந்தனம்-குங்குமம் அணிந்திருந்தார். ருத்ராட்ச மாலையை கையில் வைத்து கண்களை மூடி வேத மந்திரங்களை கூறியபடி தியானம் செய்தார். மண்டபத்தில் ஓம் என்ற ஒலி தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தது.

பிரதமர் மோடி நேற்று அதிகாலை 5.30 மணிக்கு தியானத்தை முடித்தபடி வெளியே வந்தார். 5.55 மணிக்கு சூரிய உதயத்தை விவேகானந்தர் மண்டபத்தில் இருந்தபடி கண்டுகளித்தார். அப்போது சூரிய வழிபாடு செய்த அவர் மீண்டும் மண்டபத்தை வலம் வந்தார். அந்த சமயத்தில் ஸ்ரீ பாதம் மண்டபத்திலும், சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்திலும் சிறிது நேரம் அமர்ந்து கண்களை மூடி தியானம் செய்தார். தொடர்ந்து 3-வது நாளாக இன்று பிரதமர் மோடி தியானம் மேற்கொண்டு வந்தார்.

இந்த நிலையில், 3 நாள் தியானத்தை பிரதமர் இன்று பிற்பகலில் நிறைவுசெய்துள்ளார். இதன் மூலம் பிரதமரின் 45 மணி நேர தியானம் முடிவுக்கு வந்துள்ளது. தியானத்தை முடித்த பிரதமர் மோடி, மண்டபத்தில் இருந்து வெளியே வந்தார். அதன் பிறகு விவேகானந்தர் மண்டபத்தில் பணியாற்றும் பணியாளர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இதனை தொடர்ந்து படகின் மூலமாக திருவள்ளுவர் சிலைக்கு சென்றடைந்தார். திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர் ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து டெல்லி செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com