பிரதமர் மோடி விவசாயத்தை உலகத் தரம் வாய்ந்த, போட்டித்திறன் மிக்க துறையாக மாற்றியுள்ளார் - நயினார் நாகேந்திரன்

வளர்ந்த பாரதம் என்ற இலக்கை நோக்கிய பயணத்தை நமது நாட்டின் வயல்வெளிகளில் இருந்தே பிரதமர் மோடி தொடங்கியுள்ளார் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
நயினார் நாகேந்திரன்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

"சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்" என்ற ஐயன் வள்ளுவரின் வாய்மொழிக்கு இலக்கணமாகத் திகழும் உழவர் பெருமக்களின் வியர்வையை முத்தாக மாற்றி, வாடி நின்ற வயல்வெளிகளை எல்லாம் பொன் விளையும் பூமியாக மாற்றிய பெருமை நம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியையே சாரும். கடந்த 12 ஆண்டு கால சீர்திருத்தங்களால் அவர்களின் வாழ்வில் புதிய ஒளியேற்றி, விவசாயத்தைத் தேசத்தை இயக்கும் பேராற்றலாக மாற்றிய நமது பிரதமரின் சாதனைகளைப் போற்றுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

'விதை முதல் சந்தை வரை' (Beej se Bazar tak) என்ற விரிவான கொள்கையின் கீழ், 'இ-நாம்' (e-NAM) போன்ற மின்னணு சந்தைகள் மூலம் இடைத்தரகர்களின் சுரண்டல் ஒழிக்கப்பட்டு, விநியோகச் சங்கிலி சீரமைக்கப்பட்டுள்ளது. மண்வள அட்டை மற்றும் காலநிலை மாற்றத்தைத் தாங்கும் நவீன அறிவியல் பயிர் வகைகளைப் புகுத்தியதன் மூலமாக, விவசாயத்தை நலிவடைந்த நிலையில் இருந்து மீட்டு, உலகத் தரம் வாய்ந்த, போட்டித்திறன் மிக்கத் துறையாக மாற்றி அசத்தியுள்ளார் நமது பாரதப் பிரதமர்.

விவசாயிகள் மட்டுமன்றி, மீனவர்களின் வாழ்வையும் மேம்படுத்த 'பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டம்' மற்றும் வேளாண் ஸ்டார்ட்-அப்கள் மூலம் உலக அரங்கில் நமது உழவர்களைத் தலைநிமிரச் செய்துள்ளார் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி. வளர்ந்த பாரதம் (Viksit Bharat) என்ற இலக்கை நோக்கிய பயணத்தை நமது நாட்டின் வயல்வெளிகளில் இருந்தே அவர் தொடங்கியுள்ளார்.

உழவர்களுக்குக் கண்ணியமும் அதிகாரமும் அளித்த நமது பிரதமர் நரேந்திர மோடியின் இந்த 12 ஆண்டு கால சாதனைகளையும், அவரது புகழையும் நாடெங்கும் கொண்டு சேர்ப்போம்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com