பிரதமர் மோடி வருகை: மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
பிரதமர் மோடி வருகை: மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு
Published on

மதுரை,

திண்டுக்கல் - மதுரை 4 வழிச்சாலையில் சின்னாளப்பட்டியில் காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகம் உள்ளது. பல்கலைக்கழகத்தின் பவளவிழா மற்றும் 36-வது பட்டமளிப்பு விழா வருகிற 11-ந் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்து கெண்டு 50 பேருக்கு முனைவர் பட்டங்களையும், பல்வேறு பாடப்பிரிவுகளில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பட்டங்களையும் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

இந்த விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரி எல்.முருகன் உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர். விழாவுக்கு காந்தி கிராம பல்கலைக்கழக வேந்தர் அண்ணாமலை தலைமை தாங்குகிறார். துணைவேந்தர் குர்மித்சிங் வரவேற்று பேசுகிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பட்டமளிப்பு விழாவுக்காக 11-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரில் இருந்து மாலை 3 மணியளவில் தனி விமானம் மூலம் மதுரை வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காந்தி கிராமம் அருகே உள்ள அம்பாத்துரையில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடு இறங்கு தளத்துக்கு மாலை 4 மணியளவில் வந்து இறங்குகிறார்.

இந்த நிலையில், மதுரை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. என்.எஸ்.ஜி. என்று அழைக்கப்படும் தேசிய பாதுகாப்பு படையினர், மத்திய-மாநில உளவு பிரிவு போலீசார், உள்ளூர் போலீஸ் அதிகாரிகள், ஆயுதப்படை போலீசார், தமிழ்நாடு சிறப்பு படை போலீசார் என 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் இன்று முதல் 3 நாட்கள் விமான நிலைய உள் வளாகத்தில் பார்வையாளர்கள் அனுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் நிகழ்ச்சிகளை முடித்து விட்டு, மீண்டும் ஹெலிகாப்டரில் புறப்பட்டு மதுரை வருகிறார். அதன்பின்னர் விமானத்தில் புறப்பட்டு விசாகப்பட்டினம் செல்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com