29ம் தேதி திட்டமிட்டபடி பாமக பொதுக்குழு - ஜி.கே.மணி அறிவிப்பு

பொதுக்குழு கூட்டத்தில் கூட்டணி குறித்து ராமதாஸ் அறிவிப்பார் என ஜி.கே.மணி கூறினார்.
சென்னை,
பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில், சேலத்தில் வரும் 29ஆம் தேதி பாமக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தாங்கள் தான் உண்மையான பாமக எனவும், பாமக என்ற பெயரில் ராமதாஸ் தரப்பில் பொதுக்குழுக் கூட்டம் நடத்த அனுமதி வழங்கக்கூடாது எனவும், சேலம் மாநகர காவல் ஆணையரிடம் அன்புமணி ராமதாஸ் தரப்பில் மனு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் ஜி.கே.மணி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
சேலத்தில் 29ம் தேதி திட்டமிட்டபடி பாமக பொதுக்குழு நடைபெறும். இந்த கூட்டத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில கட்சி நிர்வாகிகள் கலந்துகொள்ள உள்ளனர். சேலம் பொதுக்குழுக் கூட்டத்தில் ராமதாஸ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார். பொதுக்குழு கூட்டத்தில் கூட்டணி குறித்து ராமதாஸ் அறிவிப்பார்.
ராமதாஸ் கூட்டத்துக்கு அனுமதி தரக் கூடாது என்று அன்புமணி கூறியதைக் கண்டித்து, "பொதுக்குழுக் கூட்டம் நடத்த டாக்டர் ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை. அவர் நடத்துகிற கூட்டம் செல்லாது. அது ஏற்புடையதல்லை. எந்த முடிவும் எடுக்க முடியாது என்று சொல்வது எவ்வளவு அநாகரிகமானது. இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன். இயக்கத்தைத் தொடங்கியது யார்? எவ்வளவு ஆண்டுகாலப் போராட்டம்? பாமகவில் இருப்பவர்களெல்லாம் ராமதாஸ் பின்னால்தான். அவர் சொன்னால்தான் வாக்களிப்பார்கள். ராமதாஸ் படத்தையும் பெயரையும் பயன்படுத்திக் கொண்டு, ராமதாஸ் பொதுக்குழுக் கூட்டம் நடத்தக்கூடாது என அன்புமணி தரப்பு கூறுவது நகைப்புக்குரியது.
இவ்வாறு அவர் கூறினார்.






