பா.ம.க. சமூக ஊடக பிரிவு நிர்வாகிகளுக்கு கொலை மிரட்டல்; நடவடிக்கை எடுக்க டாக்டர் ராமதாஸ் கோரிக்கை

பா.ம.க. சமூக ஊடக பிரிவின் பொறுப்பாளர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்திற்கு எதிராக காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
பா.ம.க. சமூக ஊடக பிரிவு நிர்வாகிகளுக்கு கொலை மிரட்டல்; நடவடிக்கை எடுக்க டாக்டர் ராமதாஸ் கோரிக்கை
Published on

சென்னை,

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த பாட்டாளி சமூக ஊடக பிரிவின் பொறுப்பாளர் சந்தோஷ் குமாரை நேற்று அதே பகுதியை சேர்ந்த பாபு என்கிற நபர் கூலிப்படை வைத்து, அந்த கூலிப்படையில் செயல்பட்ட வரதன், பிரபு, விக்னேஷ் உள்ளிட்டோரின் துணை கொண்டு சந்தோசை கடத்தி சென்று தாக்கி, அவரது கைபேசியை கைப்பற்றினர்.

அந்த கைபேசியின் மூலம் பாட்டாளி மக்கள் கட்சியின் சமூக ஊடக பிரிவின் மாநில ஒருங்கிணைப்பாளர் சோழன் குமார் வாண்டையாரை தொடர்பு கொண்ட சாலவேடு பாபு என்ற நபர் சோழன் குமார் வாண்டையாருக்கு கொலை மிரட்டல் விடுத்தும், தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி மிரட்டல் விட்டு அச்சுறுத்தலையும் ஏற்படுத்தி உள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் சமூக ஊடக பணி செய்பவர்களுக்கு எதிராக இதே போன்ற அச்சுறுத்தலை ஒரு கூட்டம் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. இந்த கூட்டத்திற்கு தலைவராக வந்தவாசி பகுதியை சேர்ந்த ஒருவர் செயல்படுவதாகவும் சொல்லப்படுகிறது. அவர் பெயரை சொல்லி சாலவேடு பாபு மிரட்டல் விடுத்துள்ளது அவரது பேச்சின் பதிவிலிருத்து தெரிய வருகிறது. இந்த நிகழ்விற்கு தமிழக காவல் துறை உடனடியாக ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

கூலிப்படையாக செயல்பட்ட பிரபு, வரதன், விக்னேஷ் மற்றும் இவர்களுக்கு தலைவராக இருந்த சாலவேடு பாபு மீது சட்ட நடவடிக்கை எடுத்தும், இவர்களுக்கு பின்புலமாக உள்ள நபரை கண்டறிந்து பாட்டாளி மக்கள் கட்சியின் சமூக ஊடக பிரிவின் சந்தோசுக்கும், சோழன் குமார் வாண்டையாருக்கும் மற்றும் உள்ள அனைத்து நிர்வாகிகளுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டுகிறேன்.

காவல் துறையும், உளவுத்துறையும் முனைப்பு காட்டி இதுபோன்ற செயலில் ஈடுபடும் நபர்கள் மீது ஆரம்பத்திலேயே தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு, இதுபோன்ற குற்ற செயல்கள் இதன் பிறகு தமிழகத்தில் எங்கும் நடைபெறாத வண்ணம் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுகிறேன் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com