

சென்னை,
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ந் தேதி நடைபெற உள்ளது. வரும் 21ம் தேதி மாலை வரை மட்டுமே தேர்தல் பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்படி திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு க ஸ்டாலின் இரண்டு நகரங்களில் காலை, மாலை என பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதேபோல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தினமும் பல தொகுதிகளில் வாகன பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தனது வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார்.
அந்த வகையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தேர்தல் அறிவிப்பு பிறகு, கடந்த மாதம் 30ம் தேதி பெரம்பூர் மற்றும் கொளத்தூரில் தனது பிரசாரத்தை தொடங்கினார். பின்னர் திருநெல்வேலியில் நிர்வாகிகளை ஆதரித்து பிரம்மாண்ட பிரசாரத்தை நடத்தினார். தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு சென்றார். அங்கு அவர் நடத்திய வாகன பேரணி தமிழகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்தது.
இதனிடையே ஏப்ரல் 9ம் தேதி கடலூரில் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கேட்டு இருந்த நிலையில், போலீசார் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். 9-ம் தேதி புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற காரணத்தால் இந்த பிரசாரம் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் நாளை (ஏப்ரல் 11-ம் தேதி) கடலூரில் பிரசாரம் செய்ய விஜய்க்கு போலீசார் அனுமதி அளித்துள்ளனர். கடலூரில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடலூர், மஞ்சக்குப்பம், வடலூர், விருத்தாசலம் புறவழிச்சாலை, திட்டக்குடி ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிக்க விஜய்க்கு அனுமதி தரப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து வரும் 12ம் தேதி கன்னியாகுமரியில் விஜய் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளார்.