கோவையில் பரபரப்பு: போதை ஊசி செலுத்திக்கொண்ட கல்லூரி மாணவர் சாவு - மருந்துக்கடை உரிமையாளர் கைது

கோவையில் போதை ஊசி செலுத்திக்கொண்ட கல்லூரி மாணவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக போதை மாத்திரை விற்ற மருந்துக்கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
கோவையில் பரபரப்பு: போதை ஊசி செலுத்திக்கொண்ட கல்லூரி மாணவர் சாவு - மருந்துக்கடை உரிமையாளர் கைது
Published on

கோவை:

இந்த பரபரப்பு சம்பவம் குறித்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கோவை மாவட்டம் மதுக்கரை அருகே உள்ள தனியார் கல்லூரியில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அஜய்குமார் (வயது 20) என்பவர் பி.இ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக அவர் அந்த பகுதியில் அறை எடுத்து தனது நண்பர்களுடன் தங்கியிருந்தார். இந்த நிலையில் அஜய்குமாருக்கு கடந்த 13-ந் தேதி திடீரென வாந்தி எடுத்து மயக்கம் அடைந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சக நணபர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டவரை பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலேயே அஜய்குமார் இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.

இதுசம்பந்தமாக மாணவனின் தந்தை சவுந்தரபாண்டியன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் இயற்கைக்கு முரணான மரணம் என மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் இறந்த மாணவனின் பிரேத பரிசோதனையில் இடது முன் கையில் நரம்பு வழியாக போதை ஏற்படுத்தக்கூடிய மருந்துக்களை ஊசி மூலம் ஏற்றப்பட்டதால் இறப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்தது.

இது தொடர்பாக கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், இறந்த மாணவர் வலி நிவாரண மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் தண்ணீரில் கரைத்து சிரிஞ்சு மூலமாக போதைக்காக தனக்குத்தானே செலுத்திக் கொண்டது தெரிய தெரியவந்தது.

மேலும் இறந்த மாணவனின் நண்பர்களை விசாரணை செய்ததில் மேற்கண்ட வலி நிவாரண மருந்தை கும்பகோணத்தில் தனியார் மருந்து கடை வைத்திருக்கும் முகமது பஷீர் என்பவர் எவ்வித மருத்துவர் பரிந்துரை இல்லாமல், லாப நோக்கத்தோடு இம்மாணவனுக்கு ஆன்லைன் மூலம் விற்பனை செய்தது கண்டறியப்பட்டது.

எனவே மேற்படி வழக்கின் சட்டப்பிரிவை மாற்றம் செய்து, போதை ஏற்படுத்த கூடிய வலி நிவாரண மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரை இல்லாமல் விற்பனை செய்த குற்றத்திற்காக முகமது பஷீரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மாணவர்கள் இளம் வயதிலேயே போதை போன்ற தவறான வழியில் செல்லக்கூடாது என்றும், யாரும் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எவ்வித மருந்துகளையும் உட்கொள்ளக் கூடாது எனவும் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com