

சென்னை,
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொழிலதிபர் ஜெம் வீரமணி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் மீதான புகாரை சிறப்பு புலனாய்வுக்குழு விசாரித்து வருகிறது.
இதுவரை வீரமணி மீது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சென்னையை சேர்ந்த சிறுமியின் தாய் அளித்த புகாரில் பதியப்பட்ட வழக்கில், வீரமணியை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என சிறப்பு புலனாய்வுக்குழு சென்னை போக்சோ சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனு நீதிபதி எஸ்.பத்மா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வீரமணி தரப்பில், இந்த வழக்கில் ஏற்கனவே முழுமையாக விசாரணை நடத்தப்பட்டுள்ளதால் போலீஸ் காவலுக்கு அனுமதிக்கக்கூடாது என வாதிடப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி, வீரமணியை 2 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழுவுக்கு அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில், கோர்ட்டு உத்தரவின்படி, புழல் சிறையில் வைத்து ஜெம் வீரமணியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடித்து மீண்டும் அவரை சனிக்கிழமை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். முதலாவதாக பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில் ஏற்கெனவே 3 நாட்கள் ஜெம் வீரமணியிடம் விசாரணை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.