அன்பில் மகேஷை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்

முன்னாள் எம்.எல்.ஏ. முத்துகுமாரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
அன்பில் மகேஷை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்
Published on: 

சென்னை,

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் திட்டமிட்டுள்ளனர்.

ரூ.100 கோடி லஞ்ச புகார்

கடந்த திமுக ஆட்சி யில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி இருந்தார். அந்த காலக்கட்டத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம். டி.டி.சி.பி., சி.எம்.டி.ஏ., அனுமதிகள் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாககூறி, ரூ.100 கோடிக்கு மேல் சட்டவிரோதமாக வசூலித்ததாக தனியார் பள்ளிகள் சங்கம் தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தனியார் பள்ளிகள் சங்கத் தலைவரும், தி.மு.க. பிரமுகருமான பி.டி.அரசகுமார் உள்பட பலருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தனர். இதில் பி.டி.அரசகுமார். அவரது உறவினர்களான ஆரோக்கிய ராஜ், சுரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்கின் வேகம் சூடுபிடித்தது.

அன்பில் மகேஷ் வீட்டில் சோதனை

மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் முன்னாள் எம்.எல்.ஏ.வும், தி.மு.க. பிரமுகருமான முத்துகுமாரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இதனிடையே அன்பில் மகேஷ் வீடு உள்ளிட்ட இடங்களில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். தொடர்ந்து, அன்பில் மகேஷை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வரவழைத்து 7 மணி நேரம் விசாரணையும் நடத்தினர். கைது செய்யப்பட்ட பி.டி.அரசகுமார் உள்பட 3 பேரும் சமீபத்தில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

முன்ஜாமின் மனு தள்ளுபடி

இதனையடுத்து வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில், அன்பில் மகேஷ் முதலில் மனு தாக்கல் செய்தார். பின்னர், வழக்கில் முன்ஜாமின் கேட்டு ஐகோர்ட்டில், அன்பில் மகேஷ் மற்றொரு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி, அன்பில் மகேசுக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்து நேற்று உத்தரவிட்டார்.

கைது

ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ததை தொடர்ந்து தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று கைது செய்யப்பட்டு நள்ளிரவில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அன்பில் மகேஷுக்கு முதல் வகுப்பு சிறையில் அடைக்கவும், தரமான உணவு வழங்கவும் மற்றும் தேவைப்பட்டால் மருத்துவ சிகிச்சை வழங்கவும்" நீதிபதி உத்தரவிட்டார்.

காவலில் எடுத்து விசாரணை

இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் திட்டமிட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதுதொடர்பாக ஓரிரு நாளில் மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com