விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் மோட்டார்சைக்கிள் திருடிய போலீஸ் ஏட்டு கைது

மோட்டார்சைக்கிள் திருடியதாக கைது செய்யப்பட்ட போலீஸ் ஏட்டு மீனாட்சி சுந்தரத்தை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ நாதா உத்தரவிட்டார்.
விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் மோட்டார்சைக்கிள் திருடிய போலீஸ் ஏட்டு கைது
Published on

விருதுநகர்,

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா ஈச்சனேரி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 36). கட்டிட தொழிலாளி. கடந்த 19-ந்தேதி விருதுநகர் அருகே கட்டனார்பட்டி பட்டாசு ஆலையில் நடந்த வெடிவிபத்தில் 25 பேர் பலியாகினர். இதில் ஆனந்தனின் உறவினர் பேச்சியம்மாளும் இறந்தார். இதையடுத்து வெடிவிபத்தில் பலியானவர்களின் உடல்கள் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதையறிந்த ஆனந்தன் தனது சகோதரர்கள் மாரிமுத்து, குமார் ஆகியோருடன் கடந்த 20-ந்தேதி விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு மோட்டார்சைக்கிளில் சென்றார். அங்குள்ள பூங்கா அருகே மோட்டார்சைக்கிளை நிறுத்தி இருந்தார். இதையடுத்து அவர் திரும்பி வந்து பார்த்தபோது அவரது மோட்டார் சைக்கிளை காணவில்லை.

இதுகுறித்து ஆனந்தன் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதன்படி விருதுநகர் மேற்கு போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றும் மீனாட்சி சுந்தரம் (49) என்பவர் ஆனந்தனின் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து விருதுநகர் கிழக்கு போலீசார் மோட்டார் சைக்கிளை திருடிய மீனாட்சி சுந்தரத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் மோட்டார்சைக்கிள் திருடியதாக கைது செய்யப்பட்ட போலீஸ் ஏட்டு மீனாட்சி சுந்தரத்தை பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ நாதா உத்தரவிட்டார். அரசு ஆஸ்பத்திரியில் நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை திருடிய போலீஸ் ஏட்டு கைது செய்யப்பட்ட சம்வம் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com