தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காவலர் பணியிடை நீக்கம்

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஒரு தொழிலாளியின் மனைவியிடம் காவலர் ஒருவர், செல்போன் சார்ஜர் கேட்பது போல பேச்சு கொடுத்து, பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காவலர் பணியிடை நீக்கம்
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகேயுள்ள தெற்கு காலாங்கரையைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர், உடல்நலக் குறைவு காரணமாகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு உதவியாக அவரது 28 வயது மனைவி உடனிருந்தார்.

அதே வார்டில் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவருக்கு பாதுகாப்பு பணிக்காக, தட்டப்பாறை தெற்கு தெருவை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (வயது 36) என்ற காவலர் பணியமர்த்தப்பட்டிருந்தார். இவர் தற்போது சிப்காட் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார்.

சம்பவத்தன்று நள்ளிரவில், காவலர் கோபாலகிருஷ்ணன் அந்தப் பெண்ணிடம் சென்று செல்போன் சார்ஜர் கேட்பது போல பேச்சு கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்தப் பெண்ணிற்கு அவர் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் இதுகுறித்துப் புகார் அளித்தார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில், தூத்துக்குடி தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் காவலர் கோபாலகிருஷ்ணன் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் மீது பாலியல் தொந்தரவு, பெண்ணைத் துன்புறுத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து கோபாலகிருஷ்ணனை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். காவல்துறையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதை கருத்தில் கொண்டு, அவர் நேற்று முறைப்படி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அரசு மருத்துவமனையிலேயே பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் ஒருவரே இத்தகைய செயலில் ஈடுபட்டது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com