

விருதுநகர்,
விருதுநகரில் நேற்று முன்தினம் பல்வேறு மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடந்தது. இந்தநிலையில் விருதுநகர் த.வெ.க. ஒன்றிய செயலாளரான புல்லலக்கோட்டையை சேர்ந்த முத்துவேல் என்பவர் தனது ஆதரவாளர்களுடன் சின்னமூப்பன்பட்டியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் அமைக்கப்பட்டிருந்த முகாமுக்கு சென்றார்.
அங்குள்ள மருத்துவ பணியாளர்களிடம் ஆய்வு செய்வது போல விவரங்களை கேட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் முதல்-அமைச்சர் விஜய் நடித்த ஒரு திரைப்படத்தின் பாடலில் ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளார்.
மேலும் முறையான பயிற்சிகள் எதுவும் இல்லாமல் முகாமிற்கு வந்த குழந்தைக்கு தன் கையால் சொட்டு மருந்து கொடுத்து, அதையும் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். தற்போது இந்த 'ரீல்ஸ்' வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மக்கள் பிரதிநிதிகளை தவிர கட்சி நிர்வாகிகள் யாரும் ஆய்வு செய்யக்கூடாது என அமைச்சர்கள் தெரிவித்தும் விருதுநகர் ஒன்றிய செயலாளர் முத்துவேல், அங்கன்வாடி மையத்தில் ஆய்வு செய்து குழந்தைக்கு சொட்டு மருந்து கொடுத்து, அதனை ரீல்ஸ் வீடியோவாக வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக விருதுநகர் தவெக ஒன்றிய செயலாளர் முத்துவேல் என்பவரை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் 3 மாத காலத்திற்கு தற்காலிகமாக நீக்கம் செய்து விருதுநகர் தவெக கிழக்கு மாவட்ட செயலாளர் செல்வம் நடவடிக்கை எடுத்துள்ளார்.