

சென்னை,
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் (ஒழுங்குமுறை) சட்டம், 2018 பிரிவு 57-ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, தமிழ்நாடு கவர்னர் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் (ஒழுங்குமுறை) விதிகள், 2023-ல் திருத்தங்களை செய்துள்ளார். அதனை பள்ளிக்கல்வித்துறை கூடுதல் தலைமை செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன் அரசிதழாக வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-
3 ஆண்டுகளுக்கு மேலாக அங்கீகார சான்றிதழ் வழங்குவதற்கான ஒவ்வொரு விண்ணப்பத்துக்கும் நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கு ரூ.25 ஆயிரமும், நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.50 ஆயிரமும் அல்லது அவ்வப்போது அரசாங்கத்தால் குறிப்பிடப்படும் தொகையை கட்டணமாக செலுத்த வேண்டும்.
தனியார் பள்ளிகளின் நிலம், கட்டிடங்கள் மற்றும் வசதிகளை கல்வி கற்பித்தல், பாடத்திட்ட இணை நடவடிக்கைகள், மாணவர் நலத்திட்டங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் அதிகாரம் மற்றும் மேற்பார்வையின் கீழ் நடத்தப்படும் பள்ளி செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட வேண்டும்.
பள்ளி நேரத்தில் பள்ளி வளாகத்தை வெளிநபர், சங்கம், அமைப்பின் சார்பில் எந்தவொரு நிகழ்ச்சி, கூட்டம், பிரசாரம், அறிவுறுத்தல் சார்ந்த நிகழ்வுகளை நடத்த பயன்படுத்தப்படக் கூடாது. அதாவது, அரசியல், சிந்தாந்தம், வகுப்புவாதம், பிரிவினையை ஏற்படுத்தும் கூட்டங்கள், பள்ளிக்கல்வி நோக்கங்களுடன் தொடர்பில்லாத கூட்டங்கள் நடத்த அனுமதி கிடையாது.
அதேநேரத்தில், கலாசார நிகழ்வுகள், சமூக சேவைத் திட்டங்கள், ரத்ததான முகாம்கள், நினைவு விழாக்கள் நடத்த அனுமதிக்கலாம். ஆனாலும் அவை மதசார்பற்றவை, அரசியல் சார்பற்றவையாக கல்வி நிறுவனத்தின் நேரடி மேற்பார்வை மற்றும் பொறுப்பின் கீழ் நடத்தப்படுவதோடு, தகுதி வாய்ந்த அதிகாரி அல்லது அரசாங்கத்தால் குறிப்பிடப்படும் வேறு எந்த அதிகாரியின் முன் அனுமதியை பெற்றிருக்க வேண்டும். இவ்வாறு அந்த அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.