

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி த.வெ.க. ஆட்சியை பிடித்தது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இதனால் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி. வேலுமணி தலைமையில் தனி அணி உருவானது. சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் இந்த அணியை சேர்ந்த 25 எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க. அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனையடுத்து அவர்களை தகுதிநீக்கம் செய்ய எடப்பாடி பழனிசாமி தரப்பு சபாநாயகரிடம் மனு கொடுத்தது. இதற்கிடையே 4 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்து த.வெ.க.வில் ஐக்கியமானார்கள்.
நீண்ட இழுபறிக்கு பின்னர் மற்ற 21 எம்.எல்.ஏ.க்களும் மன்னிப்பு கடிதம் கொடுத்ததால் அவர்கள் மீதான நடவடிக்கையை எடப்பாடி பழனிசாமி திரும்ப பெற நடவடிக்கை எடுத்தார்.இந்த நிலையில் அ.தி.மு.க.வில் இருந்து முன்னாள் அமைச்சர்களும், நிர்வாகிகள் பலரும் விலகி தொடர்ந்து த.வெ.க.வில் இணைந்து வருகிறார்கள். நேற்று முன்தினம் முன்னாள் அமைச்சர் பச்சைமால், முன்னாள் எம்.பி. பாலகங்கா உள் ளிட்டோர் இணைந்தனர். அந்த வகையில், அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணைச்செயலாளரான நடிகை கவுதமியும் கட்சியில் இருந்து நேற்று விலகி உள்ளார். இதற்கிடையே முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கட்சி தலைமைக்கு எதிராக மீண்டும் போர்க்கொடி தூக்கினார். நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார். விரைவில் செயற்குழுவை எடப்பாடி பழனிசாமி கூட்ட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரும் இன்று எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக விமர்சித்துள்ளார். சி.விஜயபாஸ்கர் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியதாவது: -
உழைக்கும் உண்மைத் தொண்டர்களை
எதிரிகளாகப் பார்க்கும் தலைமையும்,
கேள்வி கேட்பதையே
குற்றமாகப் பார்க்கும் அரசியலும்..
‘வெற்றிக்கான பாதை அல்ல.’
வரலாறு நினைவில் வைத்திருப்பது
எத்தனை பேரை நீக்கினோம்
என்பதை அல்ல…
எத்தனை பேரை ஒன்றிணைத்தோம்,
எத்தனைக் களங்களை வென்றெடுத்தோம்
என்பதைத்தான”என்று பதிவிட்டுள்ளார்.