

சென்னை,
யுஏபிஏ சட்டத்தை ரத்து செய்து அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அரசியலமைப்பு மற்றும் நீதி பரிபாலன முறைக்கு எதிரான சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தை (யுஏபிஏ) மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி, பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் அமைந்துள்ள உழைக்கும் மக்கள் கல்வி மாமன்றத்தில் நேற்று கருத்தரங்கம் நடைபெற்றது.
பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் சமூக ஆர்வலருமான யா.அருள் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன், எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணை தலைவர் தெகலான் பாகவி, சென்னை ஐகோர்ட்டு கிளை மூத்த வழக்கறிஞர் மோகன், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, எழுத்தாளர் வ.கீதா, தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்வில் பங்கேற்ற பேச்சாளர்கள் பேசுகையில், "நாட்டின் பாதுகாப்பிற்காக கொண்டுவரப்பட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம், தற்போது தனிமனித சுதந்திரத்தை பறிக்கும் அடக்குமுறை கருவியாகவும், அரசியல் பழிவாங்கும் ஆயுதமாகவும் மாற்றப்பட்டுள்ளது. 'குற்றம் நிரூபிக்கப்படும் வரை ஒருவர் நிரபராதி' என்ற அடிப்படை நீதித்துறை கோட்பாட்டை தலைகீழாக மாற்றி, இயல்பான பிணை ஜாமீன் உரிமையை தடுப்பதன் மூலம் இச்சட்டம் மிகப்பெரிய மனித உரிமை மீறலுக்கு வழிவகுக்கிறது.
ஜனநாயக ரீதியாக குரல் எழுப்புபவர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், ஒடுக்கப்பட்ட பழங்குடியினர், சிறுபான்மையினர் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்போரை ஒடுக்குவதற்காகவே இச்சட்டம் பயன்படுத்தப்படுகிறது. முந்தைய 'தடா', 'பொடா' போன்ற சட்டங்களுக்கு காலக்கெடு இருந்த நிலையில், யுஏபிஏ சட்டத்திற்கு எந்த காலக்கெடுவும் இன்றி நீடித்து வருகிறது.
பீமா கோரேகான் வழக்கு உட்பட தற்போதைய பாஜக ஆட்சியில் இச்சட்டத்தின் கீழ் பதியப்பட்ட 8,719 வழக்குகளில், வெறும் 2.25 சதவீதம் வழக்குகளில் மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் கைது செய்யப்பட்டவர்களில் 90 சதவீதம் பேர் எந்தவொரு விசாரணையுமின்றி 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறையிலேயே வாடும் அநீதி தொடர்கிறது. இது முறையான சட்ட நடைமுறைகளுக்கு அப்பால், விசாரணையின்றி தண்டனை வழங்கும் 'கருப்பு சட்டமாக' விளங்குகிறது.
எனவே, அரசியலமைப்பு உரிமைக்கும், நீதிக்கும், மனிதநேயத்திற்கும் பெரும் சவாலாக விளங்கும் யுஏபிஏ சட்டத்தை உடனடியாக முழுமையாக ரத்து செய்ய வேண்டும்; இச்சட்டத்தின் கீழ் எவ்வித ஆதாரமுமின்றி சிறையில் வாடுபவர்களை மனிதநேய அடிப்படையில் விரைந்து விடுதலை செய்ய வேண்டும்" என்று மத்திய அரசை வலியுறுத்தினர்.
இந்த கருத்தரங்கில் வழக்கறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், பெண்கள் உள்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.